LOADING

Type to search

உலக அரசியல் கனடா அரசியல்

பிரித்தானியா – இலண்டனில் நெஞ்சங்களை நிறைத்ததாக விளங்கிய சுருதி தேவதாஸின் பரத அரங்கேற்றம்

Share

(புலவர் சிவநாதன் – தமிழவை இலண்டன். அவர்களின் பார்வையில்)

நவம்பர் 30, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நாட்டிய அரங்கேற்றம் எனது நெஞ்சினை நிறைத்ததாகவும் எனக்குள் எமது தமிழர் சமூகத்தின் தனித்துவமான கலைத்துவ ஆளுமை பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் கடந்து சென்றது என்பேன்!

இந்நிகழ்வு எனது முதுமையை அகற்றி எனக்குள் இளமையைப் பாய்ச்சியதெனலாம்லண்டன் பிரித்தானியாவில் உள்ள குறொய்டன் Fairfield மண்டபத்தில்..நடந்தேறிய.. நாமெல்லோரும் நன்கறிந்த..E K ராஜகோபால்… மூத்த நாட்டிய ஆசியை ராகினி ராஜகோபால் ஆகியோரின் பேர்த்தியும்..தாயின் வழியிற் தன்பணி தொடரும் சர்மினி தேவதாஸ் மற்றும் கண்ணன் தேவதாஸின் மகளுமான…செல்வி சுருதி தேவதாஸ் அவர்களின்.. நாட்டிய அரங்கேற்ற நிகழ்வைப் பார்த்து மகிழும் அனுபவம் எனக்குக் கிடைத்தது! ராஜகோபால் அவர்களுடன் எனது கவிதை இலக்கியப் பயணத்தினூடும் சகோதரி ராகினி ராஜகோபாலுடனும் சர்மினி தேவதாஸுடனும் எனது நாட்டியக் கலை ஈடுபாடுகள் மூலமும் வளர்ந்து வந்த அன்புரிமையின் விளைவாக… மருகி சர்மினியின் அழைப்பினை ஏற்று சுருதியின் அரங்கேற்றத்தைக் காணச் சென்றிருந்தேன்!

 

உண்மையில்… மூன்று தலைமுறைகளை இணைக்கின்ற ஒர் ஆளுமைச் செல்நெறியின் பிரதிபலிப்பாகவே இதனை எம்மால் இனங்காண முடியும் என்பதில் ஒருவித ஐயப்பாடும் இருக்க முடியாது!

நாட்டிய இசையோடு இணைந்த நட்டுவாங்க ஓசைச் சூழலிலும்..நாட்டியக் கலை மாணவமணிகளின் பாதச்சலங்கைகளின் காட்சிச் சூழலிலும் மழலைப்பருவத்திலிருந்தே வளர்ந்த ஒரு குழந்தைக்கு அந்தக்கலை ஆழ்ந்து வேரூன்றி அகன்று விரிந்து வளர்ந்து மிளிர்கிறதென மிகவும் இலகுவாக விமர்சிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்க முடியும்!ஆனால்.. இவற்றை எல்லாம் கடந்து ஒரு கலையாளுமைக்குள் ஒளிரும் அதியுன்னத கலையார்வத்தையும் கலாசக்தியையும் தன்னகத்தே கொண்ட கலைத்திறன் ஒருவருக்கு அமைவதென்பது மிகவும் அரிதென்பதே…

எனது ஆறு தசாப்தங்களுக்கு மேலான இயல் இசை நாடக நாட்டிய கூத்தியல் கலைகள் குறித்த எனது ஈடுபாடுகள் எனக்களித்த அனுபவப் பாடமாகும்!கலையும் கவிதையும் கற்பதால் மட்டும் மொட்டாகி மலராகிக் காயாகிக் கனிவதல்ல! இதற்கும் மேலான ஏதோ ஒரு உள்ளொளியும் வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும்!

தன்னார்வமும் தற்துணிவும் அர்ப்பணிப்பும் ஆர்வமும்வேட்கையும் வேட்டலும் வேணவாவும் தொடர்ச்சியான ஈர்ப்பும் ஈடுபாடும் உழைப்பும் ஆற்றலும் பயிற்சியும் கற்றலும் ஒருங்கேயமைந்த உயிரியக்கம் மெய்யியக்கம் உள்ளவர்களாலேயே கலைத்துவத்தின் உச்சத்தை நோக்கிப் பயணிக்க முடியுமென்பது எனது கருத்தாகும்!

நானும் எனது கலைப்பயணத்தில்.. மிகவும் அனுபவம் வாய்ந்த இசை நாட்டிய ஆளுமைகளோடு இணைந்து பல நாட்டிய நாடகங்களை உருப்படிகளை எழுதி அவர்களது தயாரிப்புகளை முன்னரங்கில் அமர்ந்து பார்த்து ரசித்திருக்கின்றேன்!அவ்வப்போது என் கண்களின் முன்னால் ஒரு சில இளம் கலைமணிகள் அதிசயங்களை நிகழ்த்தி என்னைப் பிரமிக்க வைத்துள்ளன!

அவ்வாறான ஒரு கலைமணியாகவே சுருதியை அவளது நிருத்த நிருத்திய பதவர்ண நாட்டிய ஆற்றுகைகளில் நான் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தேன்!பின்னணி இசைக்கலைஞர்கள் அனைவரும் எனது கலைப்பயணத்தில் எனது படைப்புகளில் நான் கண்ட வித்தகர்கள்! விண்ணர்கள்! வித்துவான்கள்!தம்பிகள் யாதவன் ஞானவரதன் சிதம்பரநாதன் ஐதீஸ்குமார் மற்றும் சகோதரர் பாலச்சந்தர் ஆகியோர் நாட்டிய உலகின் நல்லிசை வாணர்கள்!

இந்த நாட்டிய அரங்கேற்றத்திலும் இவர்களின் பங்களிப்பு மகத்தானதாகவே அமைந்து எமது செவிகளை நிறைத்தன!எனவே.. கடந்த வெள்ளிக்கிழமை மாலை அந்த மண்டபத்தில்..,சுருதியின் குடும்ப மரபணுத் தொடர்பு குறித்தோஇல்லை நான் மேற்குறிப்பிட்ட எனக்கும் சுருதியின் தாய்வழி உறவுச் சங்கிலி குறித்தோ எதுவித இணைப்புமற்ற நிலையில்..செல்வி சுருதி தேவதாஸ் என்ற அந்த இளம் நாட்டிய தாரகையின் ஆற்றுகையினை உணர்வுபூர்வமாக உள்வாங்கியவாறு மங்களம் வரை அமர்ந்திருந்தேன்!சுருதியின் நடனம்…புஷ்பாஞ்சலி கணேசாஞ்சலி என ஆரம்பித்து…பாரம்பரிய நாட்டிய வரிசையின் அலாரிப்பு ஜதீஸ்வரம் எனத்தூய நடன அசைவுகளைக் கொண்ட தாளம் அடவுகளை முதன்மைப்படுத்துகின்ற மிகத்துரித நடையில் அமைக்கப்பெற்ற நிருத்த வகையினூடு..பக்தி ஈடுபாட்டோடும் நாட்டியக்கலைக்கான அர்ப்பணிப்போடும் உயிர்ப்போடும் களைகட்டத் தொடங்கியது!

இவற்றைத் தொடர்ந்து..இசையும் தாள அமைப்பும் பாடல்வரிகளும் பின்னிப்பிணைந்த…‘காளி கௌத்துவம்’ மூலம் சுருதியின் நடனக்கலைப் பிரவேசத்தில்அவளது உயிரில் வேரூன்றி நிற்கும் நாட்டிய நிருத்திய ஆளுமை தலைதூக்கி நின்றது!பின்னணிக் கலைஞர்களின் அதியற்புதமான இசையணியமும்..நட்டுவாங்கத்தின் தெளிவான ஓசையும்..சுருதியின் நடனத்தோடு ஒன்றி ஒலித்து அரங்கேற்றம் என்ற பதத்தினை அனுபவம் எனும் பதத்திற்கு உயர்த்தி நின்றன!தொடர்ந்து…

‘சுவாமி நீ மனமிரங்கி’ என்ற பதவர்ணம் சுருதியின் நாட்டியக்கலை ஈடுபாட்டினையும் ஆற்றுகைத் திறனையும் மெய்ப்பாட்டு ஆற்றலையும் துல்லியமாக வெளிப்படுத்திப் பார்வையாளர்களை ஈர்த்து மகிழ்வித்ததென்றால் அது மிகையாகாது!விழிகளும் விரல்களும் பாவமும் பாதமும் அரங்கினை நிறைத்தன!காளி சக்தியே திருநடம் புரிந்தனள்!அடுத்து நிகழ்ந்தது…

‘குயிலே குயிலேகுமரன் வரக் கூவுவாய்!’ எனும் இனிமையான பதம்!பதத்தோடு இணைந்து பயணித்தது சுருதியின் உயிர்கலந்த உணர்வுகள்!அடுத்து வந்தது..‘ஆயிரங்கால் மண்டபத்தில்’ எனும் ஊஞ்சற் பாவுக்கான சுருதியின் அற்புதமான நடனம்!அதனைத்தொடர்ந்து அரங்கினை நிறைத்தன…

நாட்டிய கீர்த்தனமும் கீதமும்!சிவபுராணத்திலிருந்து சிலவரிகள்!சிந்தனைக்கும் வந்தனைக்கும் ஒளியூட்டின!

பக்திக்கான பக்குவத்தோடு பாடலும் பின்னணி வாத்தியங்களும் ஒலிக்கச் சுருதியின் நாட்டியமும் இசைந்து சென்றது!எங்கள் மூத்த சகோதரர் வழக்கறிஞர் தமிழறிஞர் சிறீஸ்கந்தராஜாவின் வரிகளில் அமையப்பெற்ற

‘குண்டுபட்ட குழந்தையொன்று கனவில் வந்தது’ என்ற தாயக நினைவுகளை மீட்கவைக்கும் உணர்வுமிக்க பாடல் வரிகளுக்குச்சுருதியின் உணர்வார்ந்த பாவங்கள் இணைந்து.. எம்மையும் ஈர்த்து இணைத்தன!

ஆரம்பத்திலிருந்து நிறைவுவரை..

சளைக்காமற் களைக்காமல்…பாடல்வரிகளின் பொருளுணர்ந்து..

தானெடுக்கும் பாத்திரங்களின் குண இயல்புகளை நன்குணர்ந்து அதீத சக்தியுடன் மிகுந்த வேக வீச்சுடன் சுருதி தான் பெற்ற பேற்றினைப் பயின்ற கலையினைப் பார்வையாளரோடு பகிர்ந்து கொண்டாரெனவே எண்ணத் தோன்றியது!

உண்மையில்…இன்றைய உலக இயக்கத்தில்.. செய்யறிவின் மயக்கத்தில்…புலம்பதி வாழ்வின் கலக்கத்தில்… எத்தனையோ அழுத்தங்களையும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டவர்களாகத்தமது கல்வி தொழில் பற்றிய எதிர்காலம் குறித்த மனச்சுமைகளோடு போராடிய நிலையிற் தமது செம்மொழி மாண்பையும் செந்நெறிக் கலைகளையும் தம்வாழ்வோடு இணைத்துச் செல்கின்ற சுருதி தேவதாஸ் போன்ற எமது எதிர்காலச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்பதனைவிட எமக்கு வேறன்ன பெருமகிழ்ச்சியையும் பெருமையையும் வழங்கப்போகிறது உறவுகளே!