குடமுருட்டி ஆற்றில் ரூ.25 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் துரை வைகோ கோரிக்கை வைத்தார்
Share
திருச்சி குடமுருட்டி ஆற்றில் ரூ.25 கோடியில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் துரை வைகோ கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், துரை வைகோ அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பணிகளை விரைந்து தொடங்குமாறு மீண்டும் வலியுறுத்தி நினைவூட்டல் கடிதத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சகோதரர் ஆதவ் அர்ஜுனாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன்.
முதலாவதாக, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி – கரூர் சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 1872-ஆம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது. திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாலமாக விளங்கும் இப்பாலம் வெறும் 7 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டுள்ளது. இப்பாலத்தின் பழமையான கட்டமைப்பு மற்றும் சேதங்களைக் கருத்தில் கொண்டும், மழைக்காலங்களில் குடமுருட்டி ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான நீர்வரத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது அவசியமாகிறது. எனவே, தற்போதைய பாலத்தின் வலதுபுறத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைந்து தயாரித்து, உரிய நிர்வாக ஒப்புதல் வழங்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். இரண்டாவதாக கடந்த 25.06.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிற வார்டுகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதை நேரில் கண்டறிந்தேன். இதனால் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இச்சாலைகளைச் சீரமைப்பதற்கான செலவின மதிப்பீடு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎஸ்ஆர் நிதி மூலம் இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பவுண்டேஷனுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, கடந்த 25.07.2026 அன்று அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்திருந்தேன் . இது தொடர்பாக 3 மாதத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பணிகளை விரைந்து தொடங்குமாறு மீண்டும் வலியுறுத்தி நினைவூட்டல் கடிதத்தை வழங்கினேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













