சாதி மதம் ஏற்றதாழ்வுகள் இல்லாத ஒரே சமுதாயமாக வாழ வேண்டும் என்பதுதான் “ஃபிளாக்” திரைப்படம்
Share
சாதி மதம் ஏற்றதாழ்வுகள் இல்லாத ஒரே சமுதாயமாக வாழ வேண்டும் என்பதுதான் “ஃபிளாக்” திரைப்படம். வைர பிரகாஷ் தயாரிப்பில் பொன்.சங்கர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ஃபிளாக்” (கொடி). தாய் தந்தையை இழந்த சிறுவன் திஹான் பெங்களூரிலுள்ள தாத்தாவின் பராமரிப்பில் வளர்கிறான். தாத்தா இந்திய தேசியக் கொடி தயாரிக்கும் காதிகிராம கேந்திரத்தில் வேலை பார்க்கிறார். அவரின் நீண்ட நாள் கனவு டில்லியிலுள்ள இந்தியா கேட்டில் ஜனாதிபதி தேசியக் கொடி ஏற்றுவதை பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதனால் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற டில்லி இந்தியா கேட்டில் ஜனாதிபதி ஏற்றவிருக்கும் தேசியக் கொடி ஏற்றத்தை பார்க்க பெங்களூரிலிருந்து ரயிலில் டில்லிக்கு புறப்படுகிறான். ஆனால் வழிதவறி கேரளாவுக்கு வந்து விடுகிறான். அதன்பிறகு மொழி பிரச்சனையால் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு செல்ல நேரிடுகிறது. கடைசியாக டில்லிக்கு வருகிறான். ஆனால் சிறுவன் திஹானை, தீவிரவாதிகளுக்கு தகவல் சொல்லும் கும்பலை செர்ந்தவன் என்று உளவுத்துறையினர் சந்தேகித்து அவனை கைது செய்கிறார்கள். முடிவில் ஜனாதிபதி தேசியக் கொடி ஏற்றப்படுவதை நேரில் பார்த்தானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. மொழி, மதம், உணவு மற்றும் உடை எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ‘இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளம் அனைவரையும் இணைக்கிறது என்பதையும், பல வேறுபட்ட இனக்குழுக்கள் ஒரே கொடியின் கீழ் அமைதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வது உலக நாடுகளுக்கே ஒரு சிறந்த பாடமாக உள்ளது என்பதையும் ஒரு சிறுவனின் பயணம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர். கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திஹான், தனது குறும்புத்தனமான நடிப்பால் வர்வதோடு, பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும் போது பார்வையாளர்கள் இதயங்களை கனக்கச் செய்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் டில்லி பயணமும், எதிர்கொள்ளும் சில சம்பவங்களும், மனிதர்களும் பார்வையாளர்கள் மனதை பதைபதைக்க வைத்தாலும், தனது இயல்பான குழந்தை தனமான நடிப்பின் மூலமாக, பல்வேறு அனுபவங்களை வழங்கி அவருடன் பயணப்படும் அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார். தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இந்தியாவின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்களை நினைவுப்படுத்தும் வகையில் பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர், தனது கேமரா கண்கள் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பரந்திருக்கும் நம் பாரதத்தின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நம் கண்முன் நிறுத்தியிருப்பதோடு, நம் இயற்கை வளம் மற்றும் கட்டிடக்கலையை வெளிக்காட்டும் பிரமாண்ட கோவில்களை கூடுதல் அழகியலோடு காட்சிப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரையுள்ள அனைத்து இன மக்களும் “நாம் இந்தியர்” என்ற ஒரே குடையின்கீழ் சகோரதத்துடன் வாழ வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சிறுவன் திஹான் சொல்லும் வசனம் பார்வையாளர்களை கைத்தட்ட வைக்கிறது. இப்படத்தைப் பார்த்து விட்டு வெளியேவரும் அனைவரின் மனதிலும் நாம் இந்தியர்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருவார்கள் என்பது திண்ணம். ஒரு சிறுவனை கதாநாயகனாக்கியிருப்பதின் மூலம், இனிவரும் இளைய தலைமுறையினராவது சாதி மதம் ஏற்றதாழ்வுகள் இல்லாத ஒரே சமுதாயமாக சகோதரத்துடன் வாழ வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படம் வெளியாகியுள்ளது.













