யாழ்ப்பாணத்தில் இரட்டை சகோதரிகள் தீயில் எரிந்து இறந்த சம்பவம் கொலை என உறவினர்கள் தெரிவிப்பு!
Share
கடந்த 01.08.2026 அன்று யாழ். புன்னாலைக்கட்டுவனின் இரட்டை சகோதரிகளான க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தாங்களாகவே தமக்கு தீமூட்டி செய்யப்பட்ட தற்கொலை முயற்சி என அந்த இரட்டையர்களில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்து மரண வாக்குமூலம் வழங்கியுள்ளார். இருப்பினும் இது ஒரு திட்டமிட்ட கொலை எனவும், கண்கண்ட சாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் அவர்கள் இவ்வாறு கூறியதாக அந்த சகோதரிகளின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களையும் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் ஒரு தற்கொலை என வெளியே பேசப்படுகிறது. ஆனால் அது ஒரு திட்டமிட்ட கொலை என நாங்கள் உறுதிப்படுத்தி கூறுகிறோம். அதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
அவர்கள் இருவரும் உயிரிழப்பதற்கு முன்னர் அவர்களில் ஒருவர் “வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் தமக்கு தாமே தீமூட்டியதாக” தெரிவித்தனர். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த சம்பவத்தை செய்வதற்கு எமது வீட்டுக்குள் ஐவர் வந்தவேளை அதனை ஒருவர் நேரில் கண்டுள்ளார். அவரையும் அந்த குழுவினர் மிரட்டியுள்ளனர். உண்மையை சொன்னால் அந்த கண்கண்ட சாட்சிக்கு ஏதாவது ஆபத்து விளைவிப்போம் என மிரட்டியதால் தான், தங்கள் உயிர் போகப்போகிறது, இன்னொருவருக்கு ஆபத்து வேண்டாம் என்ற வகையில் அவர்கள் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவித்தனர்.
எமது வீட்டின் வராந்தா பகுதியில் எரிந்த அடையாளம் இருந்தது. ஆரம்பத்தில் அந்த இடத்தில் தான் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாங்கள் கருதினோம். ஆனால் பின்னர்தான் தெரியும் அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கொடியில் உள்ள ஆடைகள் தான் கீழே போட்டு கொளுத்தப்பட்டிருந்த விடயம். அந்த இடத்தில் அவர்கள் எரிந்திருந்தால் வீட்டின் கூரையில் உள்ள லெவல் சீற்றுகளில் புகை படித்திருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் காணப்படவில்லை.
வீட்டின் கதவினை திறந்தபோது அவர்கள் இருவரும் அருகருகே எரிந்த நிலையில் காணப்பட்டனர். இது உடுப்புகள் எரிந்த இடத்திற்கு அடுத்த அறை. அவர்கள் தமக்கு தாமே வீட்டினுள் வைத்து தீமுட்டி எரிந்திருந்தால் வீட்டினுள் உருண்டு, புரண்டிருப்பார்கள். ஆனால் வீட்டின் எந்த இடத்திலும் அவ்வாறு அடையாளங்கள் எவையும் இல்லை. தீயில் எரிந்தவர்ககள் உருண்டு புரண்டால் தூரத்தூர எங்காவது தான் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அருகருகே இருந்துள்ளார்கள்.
சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு அண்மைய தினங்களில் வீட்டிற்கு பின்புறமாக இரண்டு கையுறைகள் நன்கு எரிந்த நிலையில் இருந்தன. சொப்பிங் பை என எடுத்து பார்த்தவேளை அது கையுறைகள் என்ற விடயம் தெரிந்தது. அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் முன்புறமாக நிற்கும் வாழைக்கு சருகுகள் புதைப்பதற்காக கிடங்கு வெட்டியவேளை அதிலிருந்து ஒரு கையுறை வெளிப்பட்டது. அந்த இடத்தில் சருகுகள் இருந்ததாலும், நாங்கள் மரணச்சடங்கு வேலையாக இருந்ததாலும் குறித்த இடத்தில் புதிதாக குழி வெட்டப்பட்ட விடயம் எமக்கு தெரியவில்லை.
மண்ணெண்ணெய் கொள்கலனின் கைபிடி பகுதியில் கை ரேகைகள் இல்லை. மாறாக மண்ணெண்ணெய் கொள்கலனின் கைபிடிக்கு கீழ் பகுதியில் கைவிரல்களின் அடையாளங்கள் உள்ளன. அவர்கள் தமக்கு தாமே தீ மூட்டி இருந்தால் எரிய முன்னரே மண்ணெண்ணெய் ஊற்றியிருக்க வேண்டும். மண்ணெண்ணெய் ஊற்றிய பின்னர் கொள்கலனை வைத்துவிட்டு அல்லது வீசிவிட்டு தீ மூட்டியிருப்பார்கள். ஆனால் அதில் உள்ள அடையாளம் எரிந்த பின்னர் யாரோ அவர்களது கைகளை பிடித்து வைத்தது போல் உள்ளது.
மண்ணெண்ணெய் கொள்கலனும், தீப்பெட்டியும் அருகருகே வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தமக்கு தாமே தீமூட்டி இருந்தால் தீப்பெட்டியை ஆறுதலாக கொண்டு சென்று மண்ணெண்ணெய் கொள்கலனின் அருகில் வைத்திருக்க முடியாது. தீ வைத்த உடன் அந்த வலியில் தூக்கி வீசி இருப்பார்கள். அல்லது அந்த இடத்திலேயே போட்டிருப்பார்கள்.
எமது வீட்டில் இருந்து வீதியை குறுக்காக கடந்து சுமார் 75- மீட்டர்கள் தூரத்தில் உள்ள பற்றை காணிக்குள் எரிந்த அடையாளங்கள் உள்ளன. அந்த இடத்தில் எமது வீட்டில் இருந்த தரைப்பாள் துண்டு உள்ளது. அந்த தரைப்பாளினை எமது வீட்டில் தற்போது காணவில்லை. அந்த இடத்தில் உடுப்புகள் எரிந்த அடையாளங்கள் உள்ளன. தடம் போட்டு கட்டி வைத்திருந்தமை போன்ற வயர் துண்டுகள், கயிறுகள் உள்ளன.
அதற்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் சுவரில் இரத்த மாதிரிகள் காணப்பட்டன. இவை குறித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸாருக்கு பல தடவைகள் கூறியும் அவர்கள் இதுவரை வரவில்லை. இது குறித்து நாங்கள் சுன்னாகம் பொலிஸார், யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறுவர் மகளிர் விவகார பிரிவு என அனைத்து இடங்களுக்கும் தெரிவித்தோம் ஆனால் நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம்.
அவர்கள் இருவரும் தமக்கு தாமே தீமூட்டி எரிந்திருந்தால் கால் எல்லாம் எரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களது முழங்கால்களுக்கு கீழே எந்த எரிந்த அடையாளங்களும் இல்லை. அவர்கள் படுத்திருந்த நிலையிலேயே அவர்களுக்கு தீ வைக்கப்பட்டிருப்பது இதன்மூலம் உறுதிப்படுகிறது.
எமது வீட்டுக்கு வருகின்ற பாதையில் உள்ள ஆலயத்தின் சிசிடிவி கேமரா நிறுத்தப்பட்டு உள்ளது. எமது வீட்டிற்கு அண்மையில் இருக்கின்ற வீட்டு கேமராவின் Hard disk கழற்றப்பட்டு உள்ளது. எமக்கு ஒவ்வொன்றாக சந்தேகம் வந்தபோது இப்போது தான் நாங்கள் இவற்றை ஆராய்கிறோம்.
அவர்களின் அண்ணாவான நான் அவர்களுக்கு அடித்ததாகவும், அவர்களது ஜேசிகளை எரித்ததாகவும் வெளியே பேசுகின்றார்கள். பொலிஸாரும் விசாரணைகளில் இவற்றை கேட்டனர். உண்மை அதுவல்ல. அவர்கள் கிளப்புக்கு செல்வது எனக்கு விருப்பமில்லை. நானும் ஒரு ஆண் ஆகையால் அங்கு என்ன நடக்கும் என தெரிந்துதான் நான் அங்கு போக வேண்டாம் என மறித்தேன். அத்துடன் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார்கள். எனவே கல்வி பாதிக்க கூடாது என்ற காரணத்தால் தான் மறித்தேன். மாறாக வெளியே வெளியே கதை பரவுவது போல நான் ஜேஸிகள் எவற்றையும் எரிக்கவும் இல்லை, எதுவும் செய்யவும் இல்லை. அவர்களது ஜேஸிகள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. நான் போட்டிருப்பதுகூட அவர்களது ஜேஸி தான்.
அன்று இடம்பெற்ற மரண விசாரணைகளின்போது பொலிஸார் மிகவும் மோசமாக நடந்தனர். ஏழு, எட்டு பொலிஸார் என்னிடம் திரும்பி திரும்பி விசாரணைகள் செய்தனர். ஒரு வருடத்திற்கு சடலத்தை வெளியே எடுக்க விடாமல் செய்வோம் என பொலிஸார் மிரட்டினர். அதனால்தான் அன்று நிலைகுலைந்து காணப்பட்டேன். நான் குழப்பத்தில் இருந்ததால் தான் நீதிமன்றத்திடம் இந்த விடயங்களை அன்று என்னால் கூற முடியவில்லை. இருப்பினும் சந்தேகம் என்று நான் அன்றே கூறினேன்.
அன்றையதினம் பொலிஸாரின் செயற்பாடுகள் என்னால் பொறுக்க முடியாத காரணத்தால் இறுதி கட்டத்தில் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அங்கு இருந்த அனைவரும் பார்த்தனர். அதன்பின்னரே பொலிஸார் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
தற்போது சந்தேகம் இருப்பதாக கூறி நான் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றவேளை “முதலில் என்னையும், எனது அம்மாவையும், மற்றைய சகோதரியையும் உள்ளே தூக்கி போட்டுவிட்டு தான் சந்தேகநபர்களிடம் பின்னர் விசாரணைகள் செய்வோம்” என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிரட்டுகின்றனர். சாட்யங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்ய வருமாறு பல தடவைகள் கூறியும் அவர்கள் வரவில்லை.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தவிர்ந்த கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது எமக்கு சந்தேகம் உள்ளது. எமது பிரச்சினைகள் குறித்து தீர விசாரித்து, எமது சகோதரிகளுக்கு நீதி வழங்க வேண்டும். ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவுள்ளோம். இதற்கு ஆளும் கட்சியினர் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஆளும் கட்சியில் இருப்பவர்களே! உங்கள் வீட்டு பிள்ளைகளாக அவர்கள் இருவரையும் கருதி எம்மை ஜனாதிபதியுடன் சந்திக்க வழி செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறப்பதற்கு முன்னர் “தமக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை” என கூறினர். ஆனால் எமது வீட்டில் இருந்து அந்தளவுக்கு எந்த பிரச்சனையும் அந்த அளவிற்கு இல்லை.













