நவீன் கணேஷ் இயக்கும் ‘வராகி அம்மன்’ படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது
Share
நவீன் கணேஷ் இயக்கும் ‘வராகி அம்மன்’ படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. வராகி அம்மனின் மகிமையையும், பெருமைகளையும் உலகறியச் செய்யும் வகையில், திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை, வி.கே.வி.பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பிஜே மற்றும் சந்திரசேகரன் வி,எம் ஆகியோர் தயாரிக்கின்றனர். இவர்களுடன் ஸ்டீலர் கிராப்ட்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பாலசுப்ரமணியம் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பாலாஜி கன்னியப்பன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ‘எக்கோ’ மற்றும் ‘பல்ஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நவீன் கணேஷ், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பக்தியும், பிரம்மாண்டமும் இணையும் இப்படத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் பெரும் பலமாக அமையவுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பக் காட்சிகளை, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கி வரும் முன்னணி நிறுவனமான பிக்சார் ஸ்டுயோஸ் உருவாக்குகிறது. சர்வதேசத் தரத்திலான காட்சியமைப்புகளுடன் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைத் தரும் வகையில் இப்படம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு, முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.













