LOADING

Type to search

உலக அரசியல்

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஷேக் ஹசீனா கட்சி சதி செய்வதாக வங்கதேச பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்

Share

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சதி செய்வதாக பிரதமர் தாரிக் ரகுமான் குற்றம்சாட்டியுள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்கு இடைக்கால அரசு தடை விதித்தது. இந்நிலையில், ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் வங்காளதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக புதிய கடப்பிதழ் வழங்கக் கோரி அவர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு நிராகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சி சார்பில் கடந்த வியாழக்கிழமை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. டாக்காவில் அதிகாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிட்டகாங்கில் முன்னாள் இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுசின் பூர்வீக வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும், கோபால்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையம், வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் காயமடைந்தனர். இதற்கிடையே, வடமேற்கு வங்காளதேசத்தின் லால்மோனிர்ஹாட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் தாரிக் ரகுமான், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மீது குற்றம்சாட்டினார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் மீண்டும் தீ வைப்பு சம்பவங்கள், கொலைகள், பயங்கரவாதம் மற்றும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அரசியல் வேண்டாம் என்பதுதான் மக்களின் விருப்பம். நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.