மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை – செந்தில் பாலாஜி
Share
2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலுக்கான டெண்டர் நடவடிக்கையில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டில் அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிடனர். சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, டான்ஜெட்கோ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில், மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் 1987ம் ஆண்டு தொடங்கி அன்று எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறையில்தான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மின்மாற்றிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன’ என்றார்.















