LOADING

Type to search

இந்திய அரசியல்

எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென பி. வில்சன் வலியுறுத்தினார்

Share

எப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென பி. வில்சன் வலியுறுத்தினார். வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்கவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை. இந்த பரிந்துரை, மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாக பரிசீலிப்பதற்கும் முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார். மேலும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியதாகவும், மாற்று வழியாக தங்களுடைய கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் வைக்க வாய்ப்பு ஏற்படும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார்.