LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான தனது நடவடிக்கைகள் இலக்கு வைத்து செய்யப்பட்டவை அல்ல என்கிறார் ஆளுநர்!

Share

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே நோக்கம் என வலியுறுத்தினார். ஒரு நல்ல நிர்வாகியின் கடமை எப்போதும் பாராட்டைப் பெறுவது அல்ல, மக்களின் நீண்டகால நலனுக்காகத் தேவையானபோது கடினமான முடிவுகளையும் எடுப்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்’ தொடர்பான பயிற்சி நிகழ்வு 13ம் திகதி அன்று (13.08.2026) வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஆரம்பக் கருத்துரையை வழங்கினார்.

அரசாங்கத்துடனான மக்களின் முதலாவது தொடர்பு பல சந்தர்ப்பங்களில் உள்ளூராட்சி மன்றங்களுடனேயே ஏற்படுவதால், அவற்றின் செயற்பாடுகள் மீதான மக்களின் அனுபவமே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் தீர்மானிக்கிறது என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு உரிமைக்கும் எதிர்ப்புறமாக ஒரு கடமை இருப்பதாகத் தெரிவித்த அவர், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நிர்வாகத்தின் பொறுப்பு என்றும், அதிகாரம் இருப்பதுடன் அதனை நியாயமாகப் பயன்படுத்தும் கடமையும் இருப்பதாகவும் கூறினார். உள்ளூராட்சி மன்றங்கள் தமது கடமைகளை நேர்மையாக நிறைவேற்றும்போது, மனித உரிமைகள் தனியான ஒரு கோட்பாடாக இல்லாமல் அன்றாட சேவைகளிலேயே வெளிப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கழிவுகளை அகற்றுதல், சுத்தமான குடிநீர், பாதுகாப்பான வீதிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட நகரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமமான நிர்வாகம் ஆகிய அனைத்தும் மனித உரிமைகளின் நடைமுறை வெளிப்பாடுகளே என அவர் தெரிவித்தார்.

ஜனநாயகம் என்பது ஒருவர் விரும்பியதைச் செய்வதற்கான உரிமை மட்டுமல்ல, சட்டத்துக்குள் இருந்து மக்களுக்கு சேவை செய்வதற்கான பொறுப்பு என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். கருத்துச் சுதந்திரம் பொறுப்பற்ற முறையில் எதையும் கூறுவதற்கான சுதந்திரமல்ல, உண்மையைப் பொறுப்புடன் வெளிப்படுத்துவதே உயர்ந்த ஜனநாயகப் பண்பாடு எனவும் அவர் தெரிவித்தார். கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் உண்மையில், சட்டத்தில் மற்றும் மக்களின் நலனில் வேறுபாடு இருக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் சட்டத்தையும் நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த ஆளுநர், இது யாரையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி அல்ல, உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மேலும் மதிப்புமிக்கதாக்குவதற்கான நடவடிக்கையாகும் என்றார். அதிகாரம் என்பது பொறுப்பின்றிப் பயன்படுத்தக்கூடிய சலுகையல்ல, அது மக்களின் நம்பிக்கையின் மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பொது பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.

குடிபுகு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், அது ஒரு சாதாரண நிர்வாக ஆவணம் அல்ல, கட்டடங்கள் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையிலும் உள்ளன என்பதை உறுதிப்படுத்தும் பொதுநம்பிக்கைச் சான்றிதழாகும் எனத் தெரிவித்தார். முறையான சான்றிதழ்கள் இன்றி இயங்கும் வர்த்தக நிறுவனங்களால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நகரத் திட்டமிடல் விதிகளைப் பின்பற்றாமை மற்றும் போதிய வாகனத் தரிப்பிட வசதியின்மை ஆகியவை நகரப் போக்குவரத்து நெரிசலுக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களிடமே இருப்பதாகத் தெரிவித்த ஆளுநர், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், அரசியல் அழுத்தங்களுக்கோ தனிப்பட்ட செல்வாக்குகளுக்கோ இடமளிக்காமல் சட்டத்தையே வழிகாட்டியாகக் கொண்டு செயற்படுமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். அதேவேளை, சட்டத்துக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் நிலையான வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளுக்கும் தமது முழுமையான ஆதரவு தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மக்களின் நலனே உள்ளூராட்சி நிர்வாகத்தின் மையமாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், உள்ளூராட்சி மன்றத்தின் வெற்றி அது அமைக்கும் கட்டடங்களின் எண்ணிக்கையிலோ, செலவிடும் நிதியின் அளவிலோ அல்ல, ஒரு சாதாரண குடிமகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றத்திலேயே அதன் உண்மையான வெற்றி அளவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை, பொறுப்பை வழங்கியுள்ளனர். பதவியை வழங்கவில்லை, நம்பிக்கையை வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பதே அனைவரின் உயர்ந்த கடமை என அவர் வலியுறுத்தினார்.

இப்பயிற்சியில் வடக்கு மாகாணத்திலுள்ள மேயர்கள், பிரதி மேயர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா, சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கே.கபிலன் வில்லவராஜன், யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் விசாரணை மற்றும் புலனாய்வு பணிப்பாளர் லால் வீரசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு அமர்வுகளை நடத்தினர்.