LOADING

Type to search

இலங்கை அரசியல்

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி ஊடக அமையத்தின் அலுவலகத்தை மீண்டும் வழங்க முடியாதாம்!

Share

ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான கட்டிடத்துடன் கூடிய காணி ஒன்றை 17 வருடங்களாக பலவந்தமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற மறுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியின் ஊடகச் சுதந்திரத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயரிடப்படாத ‘பாதுகாப்புக் காரணங்களை’ குறிப்பிட்டு, இதுவரை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் போக்கைப் பின்பற்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நில ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேணிவருகின்றது.

குறித்த அலுவலகம் அமைந்துள்ள கால் ஏக்கர் காணியை மீள வழங்குமாறு 2009ஆம் ஆண்டு முதல் ஆட்சியாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில், கிளிநொச்சி ஊடக அமையம் 2026 மே மாதம் தமது கோரிக்கையை மீண்டும் ஜனாதிபதி திஸாநாயக்கவிடம் முன்வைத்துள்ளது.

“அந்தப் பகுதியில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் நிலையம் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆகியன அமைந்துள்ள நிலம், அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், கிளிநொச்சி ஊடக அமையத்திற்குச் சொந்தமான காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை” என ஊடக அமையத்தின் தலைவர் மற்றும் செயலாளரின் கையெழுத்துக்களுடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், ஊடக அமையத்தின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி அலுவலகம், அதற்கு அடிப்படையாக, ஊடக அமையத்தின் கடிதத்தில் “குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல் அறிக்கை” பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

“அதன்படி, பாதுகாப்புக் காரணங்களால் குறித்த காணியையும் கட்டிடத்தையும் விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது” என ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலாளர் WMSP வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தப் பாதுகாப்புக் காரணங்கள் என்னவென்பது இரண்டு பந்திகளைக் கொண்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள், 2008ஆம் ஆண்டு வரை இந்த அலுவலகத்தைத் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதுவரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் போர் தீவிரமடைந்ததையடுத்து, தமது இருப்பிடங்களை இழந்த அவர்கள் மீள்குடியேற்றத்திற்காக மீண்டும் 2009ஆம் ஆண்டு அங்கு திரும்பி வந்துள்ளனர்.

மீண்டும் திரும்பிய அவர்கள், A9 வீதிக்கு அருகிலுள்ள ‘காக்கா கடை’ சந்தியில் அமைந்திருந்த தமது அலுவலகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் கண்டுள்ளனர்.

“எமது சொத்துக்களை விடுவிக்குமாறு கோரி இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு நாம் எழுத்துமூலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இதுவரை எந்தவொரு சாதகமான முடிவும் கிடைக்கவில்லை. வட மாகாணத்தின் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊடகச் சங்கங்கள் தற்போது தமக்குச் சொந்தமான காணிகளில் அமைந்துள்ள அலுவலகங்களில் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். பணிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமின்றி இருக்கும் ஒரே ஊடக அமைப்பு நாங்களே” என கிளிநொச்சி ஊடக அமையம் தமது கடிதத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் அதிகளவான இராணுவப் பிரசன்னம் கொண்ட பிரதேசங்களில் ஒன்றில் பணியாற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர்கள், தமது தொழிலை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய மாற்றத்தைக் காணும் வாய்ப்பு இதுவரை ஏற்படவில்லை.