பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Share
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21&ந் தேதி தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக, முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்பு மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரும் 1991 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அதிக காலம் சிறையில் இருந்து வருவதால், மாநில அரசின் பரிந்துரையின் பேரில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டதுடன், குடியரசுத்தலைவரின் முடிவுக்கு அனுப்பி வைத்தார்.
எனவே இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான கவர்னரின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியது.
விசாரணையின்போது, “ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை” என தமிழக அரசு வாதிட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிபதிகள், ‘பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்க முடியாத விஷயம். இந்த விவகாரத்தில் அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
அத்துடன் இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும், மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.













