தமிழ் சினிமாவில் ‘மகாகவி பாரதி’ பாடல்கள் | வீணை மைந்தன்
Share
அத்தியாயம்-6
“பாரதியின் பாட்டொலிக்கக் கேட்பாராகில், படித்தறியா
ஏழைக் கிழவர்கூடத் துள்ளியெழுந்து,
தொடைகள் தட்டி
வீறு கொண்டெழுவர்” என்று செவிவழி கேட்டு பிரமிப்புக் கொண்டவன் நான்!
அது எவ்வளவு சத்தியம் என பாரதியை வாசிக்கும் தோறும் உணர்ந்து வருகிறேன்!
‘கவிமணி’ சி. தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாரதி பற்றி எழுதி வைத்த கவிதை வரிகளை மீண்டும் நினைவு கொள்வது இக்காலத்தில் பொருத்தமென எண்ணுகிறேன்!
“ஊரறிய நாடறிய உண்மையெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்துரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி என்றெவரும் புகழப்பெற்றோன்
சீருயரும் தமிழ்மக்கள் செய்தவத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர் போற்றி ஏத்துவோமே
பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே!”
சினிமாக் காட்சிகளில் கதைக்களத்திற்கு பாரதி பாடல் பொருத்தமாக அமைகிறதோ இல்லையோ, பாரதி பாடல்களைப் பிரபலப்படுத்தி மக்கள் மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனும் நல்நோக்கம் கொண்ட தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் பாராட்டியே தீர வேண்டும்.
அவ்வகையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் “மேகலா பிக்சர்ஸ்” தயாரிப்பில் 1956ல் வெளியான படம் ‘ரங்கோன் ராதா’. இப்படத்தின் திரைக்கதையை அறிஞர் அண்ணாவும், வசனத்தை கலைஞர் மு. கருணாநிதியும் எழுதியிருந்தனர். நடிகர் திலகம், பி. பானுமதி, எம்.என்.ராஜம், எஸ்.எஸ். இராஜேந்திரன், ராஜசுலோசனா, முத்துராமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்த சிறந்த படமாகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரம் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரமாகும். இதை ஒரு சவாலாகவே சமாளித்திருந்தார். கதாநாயகன் ‘இமேஜ்’ கெட்டுவிடும் என்று கிஞ்சித்தும் நினைக்காமல் தனது நடிப்பாற்றலை மட்டுமே நம்பி ஏற்றுக் கொண்ட பாத்திரம் சிவாஜியினுடையது.
சரி, இப்படத்திற்கும் பாரதி பாடலுக்கும் என்ன சம்பந்தம்? இத்திரைப்படம் சுபமாக நிறைவடையும் காட்சியில் ‘மகாகவி’ எழுதிய “ஒளிபடைத்த கண்ணிணாய் வா… வா… வா…! எனும் பாடலை திருமதி. ராஜசுலோசனா தனது காதலன் எஸ்.எஸ்.இராஜேந்திரனைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவும், கலைஞர் மு.க.வும் பகுத்தறிவுக் கொள்கைகளையும், மூட நம்பிக்கைக்கான காரண காரியங்களை எதிர்த்தும் மக்கள் விழிப்புணர்வு அடைவதற்கு சினிமாவையும், நாடகங்களையும் வெகுஜன ஊடகமாகப் பாவித்து வந்த காலமது!
‘ ரங்கோன் ராதா’ திரைக்கதையில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கைகளை ஒதுக்கி விரட்டிவிட்டு அறிவுசார்ந்த முற்போக்கான செயல்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கதாநாயகி மூலம் பாடப்படுவதாக இக்காட்சியும், பாடலும் இடம் பெற்றதாக நம்பலாம்.
திரையில் இடம்பெற்ற பாரதியின் சில வரிகளை மட்டும் பதிவு செய்கிறேன்.
“ஒளி படைத்த கண்ணிணாய் வா… வா… வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா… வா… வா
தெளிவு பெற்ற மதியினாய் வா… வா… வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா… வா… வா
எளிமை கண்டு இரங்குவாய் வா… வா… வா
ஏறுபோல் நடையினாய் வா… வா… வா”
பிரபல இசையமைப்பாளர் ரி.ஆர். பாப்பா அவர்கள் முப்பத்திரெண்டு வரிகள் கொண்ட பாடலில் ஆறு வரிகள் மாத்திரம் கொண்ட பாடலாக திருமதி.பி.சுசீலா அம்மையாரின் குரலில் “ஒளி படைத்த கண்ணிணாய் வா… வா… வா…” பாடலுக்கு இசையமைந்திருந்தார்.
அடுத்து 1957ல் வெளியான “நாலு வேலி நிலம்” படத்தில் மகாகவி பாரதியாரின் முருன் தோத்திரப் பாடலொன்று இடம் பெற்றிருந்தது. “நாலு வேலி நிலம்” பிரபல நாவலாசிரியர் தி. ஜானகிராமன் அவர்களது கதையாகும். புகழ்பெற்ற நாடக, திரைப்பட நடிகரான “சேவா ஸ்டேஜ்” (Seva Stage) நிறுவனர் திரு. எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள் மேடையேற்றிய நாடகம், பின்னாளில் அவரால் சினிமாவாகத் தயாரிக்கப்பட்டது.
கிராமியப் பின்புலத்தில் பின்னப்பட்ட இக்கதையின் தலைப்புப் பாடலாக (Title song) முருகப்பெருமான் வீதிவலம் வரும் திருவிழாவில் பாரதியாரின் இப்பாடல் இடம் பெற்றிருந்தது.
முருகன் பாட்டு – நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘இசைமணி’ தெய்வீகக் குரலோன் டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் குரலில் ஒலித்த பாடலிது. இப்பாடலுக்கு ’திரைஇசைத் திலகம்’ திரு.கே.வி.மகாதேவனுடன் இணைந்து திரு.எம்.கே.ஆத்மநாதன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
இதோ ‘மகாகவி’ இயற்றிய முருகன் பாட்டு:
பல்லவி: முருகா! முருகா! முருகா!
சரணங்கள்
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவழும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங்குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே! (முருகா)
சுருதிப் பொருளே வருக
துணிவே கனலே வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்! (முருகா)
அமராவதி வாழ் உறவே
அருள்வாய்! சரணம்! சரணம்!
குமரா பிணியாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வேலவனே சரணம்! (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளரும் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமராதிபனே! சரணம்! சரணம்! (முருகா)
அடுத்த இதழில்
‘மகாகவி’ பாரதியார் எழுதிய ‘அழகுத் தெய்வம்’ தலைப்பில் இடம்பெற்ற “மங்கியதோர் நிலவினிலே” பாடல் வரிகள் இடம் பெற்ற அந்த இரு படங்கள் எவை? பாடியவர் யார்? பாடலுக்கு நடித்தவர் யார்? இசை அமைத்தவர் யார்?
ஆவலுடன் காத்திருங்கள்
– வீணைமைந்தன்













