LOADING

Type to search

சினிமா

ஜெய்பீம் சூர்யாவை தொடர்ந்து வக்கீல் கதாபாத்திரத்தில் அசத்தப் போகும் வனிதா விஜயகுமார்

Share

தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வக்கீல் கதாபாத்திரத்தில் மிரட்ட உள்ளார். நடிகர் அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்த நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பட்டையை கிளப்பி வருகின்றனர். நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் படத்தில் வக்கீலாக நடித்து அசத்திய நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் வழக்கறிஞர்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக உலக அரங்கில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என ஏகப்பட்ட நடிகர்கள் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர். அதே போல சுஜாதா, ஜோதிகா, நயன்தாரா என பிரபல நடிகைகளும் வழக்கறிஞர் வேடத்தில் மாஸ் காட்டி உள்ளனர். இந்நிலையில், நடிகை வனிதா விஜய்குமாரும் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள். சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம். ஜாதி, மதம், இனம், மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல், இங்கு இணைந்த காதலர்களை விட பிரிந்தவர்கள் தான் அதிகம். ‘சிவப்பு மனிதர்கள்’ படத்திலும் காதல், காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் பல கொலைகள் கடந்து போகிறது. இறுதியில் நீதிமன்றத்தை நாட நீதிமன்றத்தில் விறுவிறுப்பான தீர்ப்பு அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் மற்றொரு வக்கீலாக லிவிங்ஸ்டன் நடிக்க நீதிபதியாக சமீபத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் நடித்துள்ளார். மற்றும் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி மற்றொரு இளம் ஜோடியாக புதுமுகம் சத்யா அனு கிருஷ்ணா நடிக்க கஞ்சாகருப்பு, ராஜசிம்மன், சோனா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பிக் பாஸ் ரேஷ்மா, சந்தியா, பெஞ்சமின், வேல்முருகன், ஆதேஷ் பாலா, சின்ராசு, லேகா ஸ்ரீ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர். சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, எம் தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.ராஜ் கீர்த்தி படத்தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார், கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் பாடல்கள் எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர்.

தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறிய படக்குழுவினர், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் ஜோடிகள் என அசத்தி வந்த வனிதா விஜயகுமார் மீண்டும் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜி தமிழ் டிவிக்கு சென்ற வனிதா தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது குறிப்பிடத்தக்கது