மகேஷ் பாபுவுக்கு தங்கையாக நடிக்கிறார் சாய் பல்லவி
Share
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அண்ணன், தங்கை உறவு திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளன. சாய்பல்லவி தற்போது நடிகர் மகேஷ் பாபுவுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் அறிமுகமான முதல் படமே அதிரி புதிரி வெற்றி பெற்றதால் அம்மணி அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமானார். தொடர்ந்து அடித்த வெற்றியின் காரணமாக சாய் பல்லவிக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது.
அதன் காரணமாக தற்போது அவர்தான் தெலுங்கில் முதல்தர நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் வெற்றி பெற்றதின் காரணமாக சாய் பல்லவியின் சந்தை மதிப்பு எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி முதல்தர நடிகையாக உயர்ந்த சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் சாய் பல்லவி அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சாய் பல்லவிக்கு மகேஷ்பாபுவின் தங்கையாக நடிக்க விருப்பம் இல்லை என்றும், இருப்பினும் திரிவிக்ரம் படத்தை தவறவிட விரும்பவில்லை என்பதால், தங்கையாக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தமிழ் படமான வேதாளம் தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்பட்டு சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சாய் பல்லவி பல திரைப்படங்களில் அதிகளவில் நடித்து வருவதால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது, தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்













