LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டடத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்படி வடக்கின் ஆளுநர் பணிப்புரை!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் ஆலோசனையுடன் நவீன வணிக வளாகம் (Mall) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் குறைபாடுகள், நகரத் தூய்மை, அனுமதியற்ற கட்டுமானங்கள், பேருந்து நிலைய முகாமைத்துவம் உள்ளிட்ட நகர அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் 9ம் திகதி அன்று (09.11.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 1970ஆம் ஆண்டுகளில் தூய்மையான நகரமாக விளங்கிய யாழ்ப்பாணம் இன்று அந்த அடையாளத்தை இழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். வடக்கின் சில பிரதேச சபைகள் தமது எல்லைப் பகுதிகளைச் சிறப்பாகப் பராமரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையும் நகரின் தூய்மை மற்றும் முகாமைத்துவத்தில் கூடுதல் அக்கறையுடனும் உறுதியுடனும் செயற்பட வேண்டும் என்றார். இது தற்போதைய மேயர் அல்லது நிர்வாகத்தை மாத்திரம் குற்றஞ்சாட்டும் நோக்கிலான கருத்தல்ல, கடந்த கால நிர்வாகங்களிலும் காணப்பட்ட குறைபாடுகளின் தொடர்ச்சியே தற்போதைய நிலைக்குக் காரணம். எனவே, இந்நிலையை இப்போதே மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகத் தாம் நவீன சந்தையை நேரில் பார்வையிட்டபோது, அதன் பராமரிப்பு நிலை நகரின் அழகையே பாதிக்கும் வகையில் இருப்பதை அவதானித்ததாக ஆளுநர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமை, மலசலகூடங்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை, நுழைவாயில் கதவுகள் இல்லாமை, மலசலகூடக் கசிவுகள் கடைகளுக்குள் செல்வது, பயன்படுத்தப்படாத பகுதியில் மழைநீர் தேங்கி கீழ்த் தளத்துக்குக் கசிவது உள்ளிட்ட பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் வணிக நடவடிக்கைகள் எவ்வாறு சிறப்பாக நடைபெற முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், சந்தையில் அவதானிக்கப்பட்ட அனைத்துக் குறைபாடுகளையும் காலக்கெடுவுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

நகரின் நீண்டகால அபிவிருத்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைத் தொடர்ந்தும் அதே நிலையில் பராமரிப்பதற்குப் பதிலாக, நகரின் எதிர்காலத் தேவைகளையும் வணிகத் தேவைகளையும் கருத்திற்கொண்டு நவீன வணிக வளாகம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றார். இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசித்து, அரச–தனியார் கூட்டாண்மை மற்றும் முதலீட்டாளர் பங்களிப்பு உள்ளிட்ட வழிமுறைகளையும் பரிசீலிக்கலாம் எனக் கலந்துரையாடப்பட்டது. இந்த முன்மொழிவு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் தேவையான ஆலோசனைகளையும் திட்டமிடல் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நகரின் குப்பை முகாமைத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், குப்பைகளை வீசுபவர்களைக் கண்டறிவதற்காக ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைப் பகுதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்தி நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாநகர சபையும் இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். குப்பைகளைத் தரம்பிரித்துப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைத் தொடர்ந்து பேணுவதுடன், மழைக்காலத்தில் மாத்திரமன்றி ஆண்டு முழுவதும் நகரின் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களைத் தொடர்ச்சியாகத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

கல்லுண்டாயில் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டமையே அங்கு மக்களின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், குப்பைகளைக் குறிப்பிட்ட இடங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், அதற்குப் பொருத்தமான மாற்று இடங்களை அடையாளம் காண்பதிலும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். குப்பைகளை முறையாகத் தரம்பிரித்து, உரிய முறையில் அகற்றினால் இத்தகைய மக்கள் எதிர்ப்புகளையும் தவிர்க்க முடியும். நகரின் சில பகுதிகளையாவது தனியார் சுத்திகரிப்பு சேவைக்கு வழங்குவதன் மூலம் தூய்மைப் பணிகளை வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

நகரின் தூய்மையைப் பேணுவதில் மாநகர சபைக்கு மட்டுமன்றி வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளதாக ஆளுநர் வலியுறுத்தினார். நவீன சந்தை மூலம் மாநகர சபைக்கு வருமானம் கிடைப்பதால், அதற்கேற்ற வகையில் அங்குள்ள வர்த்தகர்களுக்குத் தேவையான அடிப்படைச் சேவைகளையும் மாநகர சபை வழங்க வேண்டும். நகரின் வாய்க்கால்களுக்குள் குப்பைகளைத் தள்ளுதல், பொதுவெளிகளில் குப்பைகளைக் கொட்டுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். நகரைத் தூய்மையாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர், தமது நிர்வாகக் காலத்தில் நகரை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களிலிருந்து தொடரும் பிரச்சினைகளுடன், குப்பைகளை அகற்றுவதற்கான இடத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல், ஆளணி மற்றும் வாகனப் பற்றாக்குறை, போதிய வருமானமின்மை போன்ற சவால்களையும் மாநகர சபை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். தனியார் சுத்திகரிப்பு சேவையை முன்னெடுப்பது தொடர்பில் மாநகர சபைத் தீர்மானம் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நவீன சந்தை உள்ளிட்ட விடயங்களில் ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அவர் கோரினார்.

மாநகர சபையின் பிரதி மேயர், நகரின் சில பகுதிகளில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளபோதும், அவற்றின் ஊடாகக் கண்டறியப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் நிலவுவதாகத் தெரிவித்தார். சுற்றாடல் பொலிஸார் ஊடாக இதுவரை 160 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், குப்பைகளைக் கொட்டுபவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடும் நடைமுறையைச் செயல்படுத்த நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

மாநகர சபை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், நகரில் கட்டண அடிப்படையிலான கழிவு அகற்றல் முறைமையும், குப்பைகளைத் தரம்பிரித்தே பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு அவசியம். குறிப்பாக, வர்த்தக நிலையங்களிலிருந்து குப்பைகளைத் துப்புரவு செய்து வடிகால்களுக்குள் தள்ளுவதைத் தவிர்க்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நகரின் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள அனுமதியற்ற கடைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. குறித்த காணி அரச காணியாக இருப்பதுடன், அங்கு அனுமதியின்றிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கான அதிகாரம் மாநகர சபைக்கு இருப்பதால், அதனைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலியுறுத்தினார். குறித்த கடைகள் வாழ்வாதாரத் தேவைக்காக அமைக்கப்பட்டவை அல்ல என்றும், அவற்றின் பயன்பாடு தொடர்பில் கவலைகள் நிலவுவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில், பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநகர சபை ஆணையாளர் இணக்கம் தெரிவித்தார். காணியின் உரிமம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உரிய வழக்குத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணப் பிரதேச செயலரும் இணக்கம் வெளியிட்டார். நகரின் சில வீதிகளின் ஒதுக்குப் பகுதிகளில் இடம்பெறும் கட்டுமானங்கள் மற்றும் அவற்றில் வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, வீதிகளின் ஒழுங்கையும் பயன்பாட்டையும் உறுதிப்படுத்த மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைகளுக்குள் வணிக வளாகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நீண்டகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபை நகருக்குப் பொருத்தமான நவீன வணிகக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். தற்போதைய சந்தைக் கட்டடத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பில் மாநகர சபை பொறியியலாளரால் கால எல்லையுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாநகர சபையில் சமர்ப்பித்து உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்குப் பல வாய்ப்புகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதன மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் மாநகர சபையின் வருமானம் தற்போதைய நிலையிலிருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நகரின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்கள் குடிபுகு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாநகர சபையின் வருமானத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரம் ஒரு சிலருக்குச் சொந்தமானதல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானது. எனவே, நகரின் சுகாதாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சூழலைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மாநகர சபை தனது பொறுப்பிலுள்ள சில விடயங்களில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி கவிதா ஜீவகன், யாழ்ப்பாண நகரில் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க அடையாளம் காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். நவீன சந்தை தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலிலும் வணிக வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், நெடுந்தூரப் பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு கிடைக்காமை தொடர்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விளக்கினார். அத்துடன், யாழ்ப்பாண நகரிலிருந்து ஏனைய மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான முதலாவது காலை நேரப் பேருந்துச் சேவை மற்றும் இறுதி இரவு நேரப் பேருந்துச் சேவையின் நேரங்களை விரிவுபடுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உரிய பொறுப்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் நிறைவேற்ற வேண்டும் என இறுதியில் வலியுறுத்திய ஆளுநர், 2027 ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாநகர சபை கௌரவ மேயர் மற்றும் கௌரவ பிரதி மேயர், மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணப் பிரதேச செயலர், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகப் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்), மாநகர சபை பொறியியலாளர், நவீன சந்தை மேற்பார்வையாளர் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.