தமிழ் சினிமாவில் ‘மஹாகவி’ பாரதி பாடல்கள் – வீணை மைந்தன்
Share
அத்தியாயம் – 7
” ‘பாரதி’ என்ற பெயரை நீங்களே உங்களுக்குச் சூட்டிக் கொண்டீர்களா? அல்லது யார் உங்களுக்கு ‘பாரதி’ என நாமம் சூட்டினார்கள்?”
(பிரபல) நாடறிந்த உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர் – எழுத்தாளர் பாரதியின் கவிதை வழி சிந்தனைகளை தனது சொற்பொழிவுகளுக் கூடாக மக்களுக்கு எடுத்துரைக்கும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களை ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் நேர்காணல் செய்த வேலை எழுப்பிய சந்தேக வினாவே இதுவாகும்!
“எனது தாயார் எனக்கு சூட்டிய பெயர் இது. மூத்தவளான எனது சகோதரிக்கு ‘ஹேமா’ என அதாவது உமாதேவியாரைக் குறிக்கும் நாமம் அது, பெயர் சூட்டியிருந்தார்கள். இயல்பிலே எனது அம்மா ‘மகாகவி’யின் தீவிர ரசிகை; பக்தை என்றே கூறலாம்.
கல்வித்தெய்வம் சரஸ்வதியையும் ‘பாரதி’ என்றே போற்றி வணங்குவதால், என்னுடைய பெயரும் ஒரு தேவதையை நினைவூட்டுவதாக இருக்கட்டுமென எனக்கு என் தாயாரால் இடம்பெற்ற பெயரே ‘பாரதி’!
பெயருக்கேற்றார் போல் ‘பாரதி’யை பின்னாளில் காதலுடன் வாசிக்கத் தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காலத்திலும் பாரதி பாடல் வரிகள் புது புது விளக்கங்களையும், சிந்தனை வெளிப்பாடுகளையும் தோற்றுவித்தது. அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எனது பேச்சுகளுக்கிடையே ‘பாரதி’யின் சத்திய வரிகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறேன்! அவ்வளவு தான்! வேணுமென்றால் என்னை அந்த தெய்வீக பாரதியின் மகள்களில் ஒருவராக வைத்துக் கொள்ளுங்கள்!
இவ்வாறு ‘பாரதி’யை நன்கு வாசித்து உணர்ந்தவர்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்! இளைய தலைமுறையினர் ‘பாரதி’யின் தலைமுறை கடந்த கருத்துகளையும் – சிந்தனைகளையும் உணர வைப்பதே சான்றோர்களின் கடமையாக தொடர வேண்டும் என்பதே எனது பேரவா ஆகும்!
‘தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்கள், என தலைப்பிட்டிருந்தாலும் பாரதியின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இக்காலத்தில் பாரதி ஐயா பற்றிய தமிழ் கவிஞர்கள் எழுதி வைத்ததையும் அவ்வப்போது நினைவூட்டி மகிழவிரும்புகிறேன்.
இதோ பாரதியின் வாரிசென வந்தவர்களில் ஒருவரான நமது ‘கவியரசு’ கண்ணதாசன் எழுதி வைத்த சில புகழ் வரிகள்…
“வான வீதியிலே
பாரதியை கண்டேன்
வைத்த விழி வாங்காமல்
வார்த்தபடி நின்றேன்
மோனவெளி வீதியிலே
மூச்சடங்கி நின்றான்
மூன்று தமிழ் ஆய்ந்த கவி
முன் நடந்து சென்றேன்
கூனலிளம் வெண்ணிலவின்
குளிர் முகத்து நடுவே
குத்துகிற மீசையையும்
கூர் விழியும் கண்டேன்
தேனமுதப் பாவலனின்
சிந்தையிடை யாதோ
தீராத துன்பநிலை
சிந்துவதை கண்டேன்!
படித்தேன் ரசித்தேன் என கவியரசர் பாரதியை உங்கள் கண்முன் நிறுத்தியுள்ளேன். இனி ‘மங்கியதோர் நிலவினிலே’ உலா போவோம் வாருங்கள்.
‘அழகு தெய்வம்’ எனும் தலைப்பில் பாரதி ஐயாவினால் எழுதப்பட்டு பாடப்பெற்ற 24 வரிகளுள் அமைந்த பாடல் வரிகளுள் முதல் 8 வரிகளை மட்டும் முதன்முதலாக 1959 ஆம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தில் ஏழிசை வேந்தர் அமரர் ரி.எம் சௌந்தரராஜன் அவர்கள் படத்தின் நாயகன் திரு ஜெமினி கணேசன் அவர்களுக்காக அழகாக பாடியிருந்தார்கள். படத்தில் இடம் பெற்ற பாடல் மெட்டு போட்டு இசையமைத்தவர் இசை மேதை ஜி ராமநாதன் ஐயர் ஆவார்!
இதே பாடல் அடுத்த ஆண்டு வெளியான ‘பாவை விளக்கு’ படத்திலும் இடம்பெற்றிருந்தது. (1960) புகழ்பெற்ற நாவலாசிரியரான அமரர் அகிலன், ‘கல்கி’ வார இதழில் எழுதிய ‘பாவைவிளக்கு’ நாவலை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் “புராண இதிகாச அருட்செல்வர்’ அமரர் ஏபி நாகராஜன் ஐயா அவர்களாகும்.
‘திரை இசைத் திலகம்’ கேவி மகாதேவன் இசையில் ‘இசை சித்தர்’ சி எஸ் ஜெயராமன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயாவிற்காக பாடியிருந்தார்.
ஒரே பாடலில் இரு வெவ்வேறு பாடாகர்களால் வேறு வேறு இராகங்களில் பாடப் பெற்றிருந்தது. இருவரது குரல் வளமும் எங்களையும் முணுமுணுக்க வைத்தது.
மூன்றாவது திருமதி சிவசங்கரி அவர்களது நாவலான ‘ஒரு மனிதனின் கதை’ தொலைக்காட்சி தொடராகவும் ‘தியாகு’ என்னும் பெயரில் ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த படத்திலும் ‘மங்கியதோர் நிலவினிலே’ பாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசையமைத்தவர்கள் சங்கர் – கணேஷ் ஆகியோராவர்.
இதோ மூன்று திரைப்படங்களிலும் இடம்பெற்ற ‘பாரதி’ ஐயாவின் ‘மங்கியதோர் நிலவினிலே..’ வரிகளாவன..
பல்லவி
‘மங்கியதோர் நிலவினிலே
கனவிலிது கண்டேன்’
சரணங்கள்
வயது பதினாறிருக்கும்
இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு
போன்றவொளி முகமும்
புன்னகையின் புது நிலவும்
போற்ற வரும் தோற்றம். (மங்கியதோர்)
துங்கமணி மின்போலும்
வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னை(ப்)
பாரென்று சொன்னாள்!
அங்கதனின் கண்விழித்தேன்
அடடா.. வோ அடடா.. !
அழகென்னும் தெய்வந்தான்
அதுவென்றே அறிந்தேன். (மங்கியதோர்)
இவ்வாறு பாடல் வரிகள் அவரவது இசை குரலில் கேட்கும்போது உங்களால் விரும்பப்படும் அல்லது காதலிக்கப்படும் அழகு மகள் உங்களது மனத்திரையில் வந்து நடனமாடுவாள்!
‘மகாகவி’ பாரதி ஐயா எழுதிய பாடல்களில் அவர் கண்ணனிடத்து பக்தியும் – பிரேமையும் கொண்டு பாடிய பாடல்கள் யாவும் தெய்வீக பாசுரங்களாகும்.
‘கண்ணன் பாட்டு’ என்றே தனி அத்தியாயம் அவரது பாடல் தொகுப்பில் காணலாம்.
கண்ணன் என் தோழன்
என் தாய்
என் தந்தை
என் சேவகன்
என் அரசன்
என் சீடன்
எனது சற்குரு, என பலவாறு கண்ணனை கொண்டாடியிருப்பார் ‘மகாகவி’. இவ்வளவு தலைப்புகளில் இடம்பெற்ற சில வரிகளை மட்டும் தங்களது நாயகனது குணாதிசியத்திற்குப் பொருத்தமாக தேர்ந்தெடுத்து காலத்தால் அழியாத ஒரு கம்பீர இசைக் கோர்வையை இசையமைக்க வைத்து பிரமாதப்படுத்தியிருப்பார்கள். அந்த இசை மேதையும், இயக்குனரும்! யாரென்று அறிவதற்கு அடுத்த இதழ் வரை காத்திருங்கள்!
வீணை மைந்தன்













