தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள் | வீணை மைந்தன்
Share
அத்தியாயம்:- 8
” பள்ளிப்பருவம் தொட்டு யாருடைய எழுத்துக்களைப் படித்து படித்து என்னை செம்மையாக செதுக்கிக் கொள்ள முயன்றேனோ, அந்த பாரதியை மகா சக்தியாக என் மனதில் வைத்துப் பூசித்து வாழ்பவன் நான்!
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதியை படித்து வருகிறேன்; சிந்திக்கிறேன். பாரதியின் சிந்தனைகள் சமூக வெளிகளில் பதிவு செய்ய முயல்கிறேன். எத்தனை முறை படித்தாலும் ஒரே பொருளை திரும்பத் திரும்ப தருமானால் அது உயரிய இலக்கிய படைப்பு ஆகாது. படிக்கிற ஒவ்வொரு முறையும் புதிய புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் அள்ளி அள்ளி கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்ற படைப்போ! எழுத்தோ அதுதான் காலங்கள் கடந்து வாழும்! அதுபோன்று காற்று உள்ளவரை – தமிழ் உள்ளவரை – கடைசி தமிழன் உள்ளவரை வாழக் கூடிய ஆற்றல் படைத்த எழுத்துக்கள் தான் பாரதி என்ற மகா கவிஞனின் எடுத்துக்காட்டு” என்று மனம் பூரிக்க சொல்கிறார் பாரதியின் வழியில் வந்த அறிஞர் தமிழருவி மணியன் அவர்கள்!
இனி காலங்கள் பல கடந்தாலும் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய பெரும் புகழ் படைத்த நடிகர் திலகம் ஐயாவின் படங்களில் ஒன்றான ‘படிக்காத மேதை’யில் இடம்பெற்ற மகாகவியின் பாடல் பற்றி பார்ப்போம். படம் ‘படிக்காத மேதை’. இப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலையும் சுட்டிக்காட்டி விட்டு – பின் பாடலுக்குள் செல்வோம். ‘ஆஷா பூர்ணா தேவி’ என்ற வங்க எழுத்தாயினி இன் மூலக் கதைக்கு வசனம் எழுதி இயக்குவதற்கு முதலில் தயாரிப்பு நிறுவனமான ‘பாலா மூவிஸார்’ நாடியது இயக்குனர் ஸ்ரீதர் ஆவார். ஸ்ரீதர் கதையை படித்துவிட்டு வசனம் எழுதி இயக்குவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் தன்னிடம் உதவி இயக்குனராகவும் வசனம் எழுதுபவராகவும் பணியாற்றிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களை அறிமுகம் செய்து சிபாரிசு செய்தார். பல விவாதங்களுக்கு பிறகு கே.எஸ்.ஜி வசனகர்த்தாவாகவும், இயக்கம் இயக்குனர் பீம்சிங் ஆகவும் தீர்மானிக்கப்பட்டு ‘படிக்காத மேதை’ படம் வெற்றிப்படம் ஆயிற்று. (1960)
படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்வி ரங்காராவும் சிவாஜியும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அல்ல… அல்ல… வாழ்ந்திருப்பார்கள். ‘ரங்கன்’ என்னும் எஜமான விசுவாசம் மிக்க வேலைக்காரனாக சிவாஜி நடித்திருப்பார். ரங்கனின் பணிவிடைகளை எண்ணி எண்ணி நினைத்து நன்றியுடன் கண் கலங்கி மனம் துயருறும் பின்னணியில் அமரகவி யின் ‘கண்ணன்’ பாடல் தொகுப்பிலிருந்து சில வரிகளை ஆங்காங்கு எடுத்து தொகுத்து புதிய வடிவம் கொடுத்து மெட்டமைத்து இசையமைத்திருப்பார் ‘திரை இசைத் திலகம்’ கேவி மகாதேவன். கணீரென தனது கம்பீரக் குரலில் பாடியிருப்பார் நமது தெய்வ குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள்.

‘மகாகவி’யின் கண்ணன் பாடல் தொகுப்பில் பொறுக்கி எடுத்த வரிகள் இதோ..
பல்லவி
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்… (கண்ணன்)
சரணங்கள்
சொன்னபடி கேட்பான்
துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு
சிங்காரப் பாட்டிசைப்பான்… (கண்ணை)
கண்ணை இமையிரண்டும் காப்பது போல்
என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன்… (கண்ணன்)
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன்,
கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது…
நண்பனாய்… மந்திரியாய்… நல்லாசிரியனுமாய்…
பண்பிலே… தெய்வமாய்…
பார்வையிலே.. சேவகனாய்… ரங்கன்
எங்கிருந்தோ வந்தான்… ரங்கா.. ரங்கா..
எனும் வரிகளில் கேட்பவர் உள்ளம் நெஞ்சுருகிப் போகும் அனுபவித்தால் புரியும்.
அடுத்து 1963இல் ‘இயக்குனர் திலகம்’ கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கே.ஜே மகாதேவன் அவர்களது மூலக் கதைக்கு திரைக்கதை – வசனம் எழுதி இயக்கி வெளியான ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் ஒரு காட்சியில் அமரகவி பாரதியின் பாடலை பயன்படுத்தியிருந்தார். இப்படத்தின் நாயகர்களுள் ஒருவரான ‘நடிகர் திலகம்’ பாரதி பாடல் ஒன்றினை நினைத்துக்கொண்டு தூங்கச் செல்லும் போது இடம்பெற்ற கனவில் வந்த பாடல் காட்சி அது!
தூங்கப் போகும் முன் தனது வீட்டில் குடியிருக்கும் புதிதாக திருமணம் செய்த நண்பனும் அவரது மனைவியும் பிரியமுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து மனதில் மகிழ்ச்சி பொங்க அங்கு மாட்டி இருந்த பாரதியின் உருவப்படத்தை பார்த்து
… ஐயா! பாரதி… தென்கோடியில் பிறந்த ஒருவன், வடகோடியில் பிறந்து ஒருத்தி, இந்த ‘ஒருவனும் ஒருத்தியும்’ இதயத்தால் இணையும் போது அங்கு ஜாதி ஏது? மதம் ஏது? மொழி ஏது? அந்த ஐக்கியத்தை பிரிக்க வேறு வழி தான் ஏது?… ஐயா… பாரதி… உன் புகழ் வாழ்க!” என சொல்லியவாறு பாரதியின் கவிதைகள் கொண்ட நூலின் பக்கங்களை புரட்டிய வாறு, “சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்”… எனும் கவிதை வரிகளை மெல்ல முணுமுணுத்துக் பாடியவாறு தூங்கி விடுகிறான். அப்போ அவன் காணும் கனவில் பாரதி கண்ட தேசிய ஒற்றுமை பாடலாக இடம் பெற்ற பாடலை பாரதி வேடத்தில் நடிகர் திலகமே பாடுவதாகக் காட்சி இடம் பெறுகிறது. இப்படத்தில் தான் முதல் முறையாக சிவாஜி ஐயா அவர்கள் பாரதி வேடத்தில் தோன்றுகிறார். நடிகர் திலகம் அவர்கள் பாடல் வரிகளில் சொல்லப்பட்ட கோதுமை வெற்றிலை பயிர் செய்பவராகவும், மராட்டிய கவிஞராகவும், சேர நாட்டு யானைத் தந்தம் பரிசளிப்பவராகவும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பாரத குடிமகனாக நான்கு வேடங்களில் தோன்றுவார்.
‘பாரத தேசம்’ எனும் தலைப்பின் கீழ் பாரதி ஐயா புன்னக வராளி ராகத்தில் எழுதிய பாடல் வரிகள் இயக்குனரின் விருப்புக்கேற்றவாறு ஒழுங்குபடுத்தி மெல்லிசை மன்னர்களால் மெட்டமைத்து இசையமைக்கப்பட்டிருந்தது.
‘ஏழிசை வேந்தர்’ ரி.எம் எஸ் குரலில் (பெண் பாடகிகள் கோர்ஸுடன்) மிகவும் இனிமையாக காட்சிப்படுத்த பட்டிருந்தது. இதோ இடம் மாறிய பாடல் வரிகள்..
“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி அமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்
என கனவு கண்ட பாரதியின் சிந்தனைகளை மெய்ப்பட வைப்பதே எதிர்கால இளைய பாரதத்தின் லட்சியமாக வேண்டும்.
அடுத்த இதழில்.. இந்திய சுதந்திர வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிய ஒரு வீரத் தமிழனின் வரலாற்று படத்தில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் பற்றி அறிவோம்.
வீணை மைந்தன்













