ஆம்ஸ்ட்ராங்கின் செய்தியும் ஆறிய தேநீரும்
Share
சிவா பரமேஸ்வரன் & நடராசா லோகதயாளன்
ஜூலை 20 1969 அமெரிக்க நேரம் மாலை (EDT) 4:17 மணி, 30 நொடிகள் மட்டுமே செயல்படும் அளவிற்கான எரிபொருள் எஞ்சியிருந்தது. ரேடியோ மூலம் செய்தி அனுப்பினார் ஆம்ஸ்ட்ராங்:
“ஹுஸ்டன், இங்கு அமைதிப் பெருங்கடல், கழுகு தரையிறங்கிவிட்டது”
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நிலவுக்கு வெற்றிகரமான அனுப்பிய அப்பலோ 11 விண்கலத்திலிருந்து ஆம்ஸ்ட்ரங் ரேடியோ வழியாக கூறிய அந்த தகவலைக் கேட்டதும் கண்காணிப்பு மையத்திலிருந்தவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்; உலகம் ஆர்ப்பரித்தது, ஆனால் ரேடியோ மூலம் அந்த செய்தி வந்த பிறகு அடுத்த செய்தியை எதிர்பார்த்து ஒரு சிலர் அமைதியாக காத்திருந்தனர்.

கண்காணிப்பு மையத்திலிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி எழுந்து, “உங்கள் பொடியன்கள் சாதித்து விட்டனர்; நாம் நிம்மதியாக மூச்சுவிடலாம்” என்று பலத்த கரகோஷத்தில் இடையே கூறினார். அப்பவும் சிலர் அமைதியாக இருந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் ஆம்ஸ்ட்ராங்கிடமிருந்து அடுத்த ரேடியா செய்தி வந்தது
“தரையிறங்குவது மிகப்பெரும் கவலையாகவுள்ளது, இங்கு இனந்தெரியாத அம்சங்கள் ஏராளம், ஆயிரம் விஷயங்கள் பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது”
அரங்கில் அமைதியாக இருந்த குழுவிற்கு படபடப்பு அதிகரித்தது. அவர்களுக்கு வெளியே சந்தோஷம் உள்ளே சங்கடம். அறிவியலும், அறிவும் தம்மைக் கைவிடாது என்று அவர்கள் திடமாக நம்பினர். ஆனாலும் அந்த திக்…. திக்…… திக்….. இருந்துகொண்டே இருந்தது. வயிற்றிற்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. இது ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாகத் தொடர்ந்தது. அந்த கண்காணிப்பு மையத்திலிருந்தவர்கள் பியரில் திளைத்திருந்தனர். ஆனால் அந்த சிறு குழுவிலிருந்தவர்களுக்கு ஆறிப்போன தேநீரைப் பருகக் கூட மனம் ஒப்பவில்லை.
பின்னர் உலகமே காத்திருந்த அந்த தருணம் வந்தது. அமெரிக்க நேரம் இரவு 10:56 மணிக்கு, கழுகின் கதவை மெல்லத் திறந்து அதைவிட மெதுவாகப் படிகளில் இறங்கி நிலவின் பரப்பில் கால்பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். உலகில் 50 கோடி பேருக்கும் அதிகமானவர்கள் அதை தொலைக்காட்சியில் பார்த்தனர். பேசினார் ஆம்ஸ்ட்ராங்….. ரேடியே வழியே…… கரகரத்த குரலாக அது உலகெங்கும் கேட்டது.
“இது தனியொரு மனிதருக்கு சிறிய முதல் அடி, ஆனால் மனித குலத்திற்கு மிகப்பெரும் முன்னெடுப்பு”
உலகம் ஆச்சரியத்தில் ஆர்ப்பரித்தது, வாழ்த்தொலிகள், தொலைபேசி அழைப்புகள், தந்திகள் ஆகியவை நாசாவில் குவிய ஆரம்பித்தன. அறிவியல் உலகில் சரித்திரம் படைக்கப்பட்டது.
அந்த சிறிய குழுவினரின் பதற்றம் தணிந்து ஆறிய தேநீரைப் பருகி கண்காணிப்பு அறையில் நிலவிய கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டனர். அதில் ஒருவர் குப்பிளானைச் சேர்ந்த வைத்திலிங்கம் துரைசாமி.

நாசா வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பிய அப்பலோ 11 விண்கலன் திட்டத்தின் தொலைத்தொடர்பு பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்தார் சில நாட்களுக்கு முன்னர் 90 வயதில் காலமான வைத்திலிங்கம் துரைசாமி.
அந்த அப்பலோ திட்டத்தில் அவரைப் போலவே முக்கிய பொறுப்பிலிருந்த சிரில் பொன்னம்பெருமவை கொண்டாடிய இலங்கை, வைத்திலிங்கம் துரைசாமியை மறந்தது ஏன் என்பது புத்த பகவானுக்கே வெளிச்சம்.
ஈழத்து மண்ணின் சிறிய கிராமமான குப்பிளானின் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி கடந்த வந்த பாதை மிகவும் நீண்டது.
1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்த இலங்கையைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளில் ஒருவரான வைத்திலிங்கம் துரைசாமி தாயகத்தில் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், அதை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டார்.
அவர் பிறந்துவளர்ந்த வீடு தற்போது குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகிறது. அங்கு ஈழத்துச் சித்தர்கள் பலரின் படங்கள் உள்ளதோடு வாராந்தம் சனிக்கிழமைகளில் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாசாலை, புன்னாலைகட்டுவன் ஆங்கில பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ். மத்திய கல்லூரிகளில் உயர் கற்கை நெறியினை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்பு பட்டம் (B.Sc. [Hons.] in Maths) பெற்றபோதும் மாணவ பருவத்தில் குப்பிளான் விவசாய நிலங்களில் வேலை செய்வதும், சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கால்நடையாகவுமே சென்று கற்றுவந்தார்.

இலங்கை பல்கலைக்கழகத்தில் கணித, விஞ்ஞான துறையில் பட்டப்படிப்பினை முடித்தபின்பு பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்தபோது மத்திய கல்லூரி விசேட நியமனம் [Special Post with High Scale] வழங்க தயார் நிலையில் அழைப்பு விடுத்திருந்தமையால் அவர் யாழ் – மத்திய கல்லூரியில் கணிதம், பௌதிகவியல் கற்பிக்கும் ஆசிரியராகவும், மாணவர் விடுதி பொறுப்பாளராகவும் சில காலங்கள் பணிபுரிந்த காலத்தில் இங்கிலாந்து “பட்டயவியல் கணக்காளர்” [Chartered Accountant] கல்வித்துறையில் பயில்வதற்கு மனு செய்து, அனுமதி பெற்று அங்கு செல்வதற்குரிய விசா, கப்பல் பிரயாண ஒழுங்குகளை மேற்கொண்டார்.
இதற்காக 1958ம் ஆண்டு மேலை நாட்டுப் பயணங்களிற்கு விமானம் மூலம் செல்வது என்பது மிக அதிக செலவு என்பதனால் கப்பல் பிரயாணத்தின் மூலமே பிரயாணம் செய்தார். அதற்காக அப்போதே 100 பவுண்ட்ஸ் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. சில நாட்கள் பயணத்தின் பிறகு இங்கிலாந்தின் “சவுதாம்டன்” [Southamton] துறைமுகத்தினை சென்றடைந்தார்.
அவர் படித்துக் கொண்டிருக்கும் போதே லண்டனில் “கணக்காய்வு அலுவலகம் ஒன்றில் அலுவலக பணியாளராக கிழமைக்கு ஐந்து பவுண் வேதனத்திற்கு வேலை கிடைத்தது.அதேநேரம் 1958ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பங்கள் கோரும் தகவல் கிடைத்ததும் அதற்கு மனு செய்தார். லண்டனில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அப்போது பிரித்தானியாவின் காலனித்துவ நாடான அந்த அரேபிய நாட்டில் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இதன்போது 1960ம் ஆண்டு தாயகம் திரும்பி இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார்.
திருமணத்தின் பின்பு மீண்டும் யேமன் நாடு சென்று ஆசிரியர் பணியினை தொடர்ந்தவர் 1961ம் ஆண்டு அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த அவரது நண்பன் வழிகாட்டலில் அமெரிக்கா சென்று மாசச்யூட்டஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதுமாணி [M.Sc.,] பட்டமும் அமெரிக்காவின் “மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் பிரயோக கணிதத்தில் கலாநிதி பட்டமும் (Ph.D.) பெற்றார். “கலாநிதி” பட்டம் பெற்றதனை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப தகவல்களை வழங்கும் அமெரிக்காவின் பிரபல தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான `பெல்லில்` நுண்பரிசோதனை கூடத்தில் தொழில் நுட்பவியல் விஞ்ஞானியாக தமது பணியினை தொடர்ந்தார்.
விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பிற்குவிண்வெளி ஆய்வுகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இவர் பணிபுரிந்த “பெல் நுண்பரிசோதனை மையம்” கூட்டாகச் சேர்ந்து பணிபுரிந்தது. இதன்போது நாசா விண்வெளி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு வைத்திலிங்கம் துரைசாமிக்கு கிட்டியது. பின்னர் முழுநேரமாக நாசாவின் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவில் இணைந்தார்.
அப்பலோ-11 விண்கலனில் நிலவிற்குச் சென்ற பயணத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆட்ல்ட்ரின் ஆகியோருடன் அந்த விண்கலனின் தலைவராக இருந்து அதைச் செலுத்தியவர் மைக் காலின்ஸ்.விண்வெளி தொலைத்தொடர்புகள் வளர்ச்சியடைய ஆரம்பித்த அந்தக் காலத்தில் வானொலி அலைகள் (ரேடியோ வேவ்ஸ்) மூலமாகவே அந்த தொடர்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது, இப்பவும் அப்படித்தான், ஆனால் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுள்ளது.
இப்போதும் கூட அண்ட வெளியிலிருந்து பூமியில் உள்ளவர்களுக்கு வாட்ஸப்பில் அழைக்க முடியாது. அவ்வகையில் காலின்ஸ், ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோருடன் உரையாடும் முக்கிய குழுவில் குப்பிள்ளான் வைத்திலிங்கம் துரைசாமியும் இருந்தார்.
அவரோடு அந்த குழுவில் இருந்தவர் பால் ஹாரிஸ். அவரது மகனான ரிச்சர்ட் ஹாரிஸ், ” திரு துரைசாமி எனது அப்பாவின் நெருங்கிய நண்பர். அப்பலோ விண்கலம் திட்டம் குறித்து எனது அப்பா விரிவாகத் தனது டைரியில் எழுதியுள்ளார். அதில் பலமுறை அவர் திரு துரைசாமி குறித்தும் அவரது ஆழ்ந்த அறிவு, பொறுமை, திறமை, கூட்டாகச் செயல்படுவது, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகச் செயல்படுவது போன்ற பல உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்று எழுதியுள்ளார். அலுவலகத்தில் இருவரும் ஒன்றாகவே தேநீருக்கும் உணவு இடைவேளைக்கும் செல்வார்கள். அப்பலோ -11 பயணத்தில், அவர்கள் குழுவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவரும் எனது தந்தையுமே ஆம்ஸ்ட்ராங் ரேடியோ மூலம் தெரிவித்த செய்திகளைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார்” என்றார்.
காலின்ஸ், ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் சந்திரனில் இறங்கியதிலிருந்து நிலவில் கால் பதிக்கும்வரை நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்து வழி நடத்திய தொழில்நுட்பக் குழுவில் முக்கிய இடம்பிடித்திருந்த அவரை இலங்கை உரிய முறையில் கௌரவிக்காதது மிகவும் வருத்தமளிப்பது மட்டுமின்றி இனவாதத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. சிறில் பொன்னம்பெருமாவிற்கு கிடைத்த அதே அங்கீகாரம் கலாநிதிவைத்திலிங்கம் துரைசாமிக்கும் கிடைத்திருக்க வேண்டும்.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் பெருமையடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் பாராமுகமாகவே இருந்துள்ளனர். இனியாவது அவரது நினைவைப் போற்றும் வகையில் யாழ் மண்ணிலும் தலைநகர் கொழும்பிலும் அவருக்கு ஒரு நினைவிடத்தை அமைத்து, எதிர்கால சந்ததியினர் இவரைப்பற்றியும் அறிந்துகொண்டு அவரை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.
குறைந்தபட்சம் முதற்படியாக யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு சிலையும், பிரதான வீதி ஒன்றிற்கு அவரது பெயரும் வைக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.













