ஈப்போ நகரில் உலகத் தமிழிசை மாநாடு
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், மே 12:
இயற்கையோடு இயைந்த தமிழர்தம் வாழ்வில் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி, வயல் வெளியில் ஏற்றமிறைக்கும் பாட்டு, நாற்று நடவும் களையெடுக்கவும் பாட்டு, காதலுக்கும் சண்டைக்கும் சாடைமொழிப் பாட்டு என வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் தமிழிசை அலங்கரித்த காலம் ஒன்றிருந்தது.
இந்த நிலை களப்பிரர் காலத்தில் மங்கத் தொடங்கியது; ஆனாலும், சைவம் செழித்த காலத்தில் மீண்டும் தமிழும் தமிழிசையும் தமிழர் நிலத்தில் செழித்தன.
தொடர்ந்து, விஜய நகரப் பேரரசு, மராட்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என அடுத்தடுத்து மற்றவர்களே தமிழர் நிலத்தை தொடர்ந்து ஆண்டபொழுது தமிழ் மொழியுடன் தமிழிசையும் மொத்தமாக பின்னடைவை சந்தித்தன.
இதனால், கர்நாடக இசையும் தெலுங்கு கீர்த்தனையுமே தமிழிசை என்றாகி, தமிழர்தம் இசை மேடைகளை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டன. இந்த நிலை, அண்மைக் காலமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. ஆனாலும், தமிழிசைதான் தமிழரின் இசை என்னும் நிலை இன்னும் முழுதாக தோன்றவில்லை; தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த நிலைதான் தொடர்கிறது.
இந்தச் சூழலில், மலேசியாவில் பேரா மாநிலம், ஈப்போ மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு இவ்வாண்டு நவம்பர் 20-இல் நடைபெற இருக்கிறது.
பழைமைச் சிறப்பும் தொன்மை நாகரிகமும் மிக்க தமிழ் இனத்தின் இசை மரபும் பாரம்பரியப் பெருமை உடையது; அனைத்து உயிர்களையும் வயப்படுத்துவது என்னும் பொருளில் இசை என்று பெயரிட்ட தமிழரின் நுண்ணறிவைப் பாராட்ட வேண்டும். தமிழ் இசை இலக்கண நூல்கள் பலவும் அழிந்துவிட்டன.
மலேசியாவில், தமிழறிஞர் தமிழ்த்திரு. திருமாவளவன் போன்றோரின் முயற்சியால் தமிழ் இசை மீண்டும் உயிர்ப்பெற்று வருகிறது. இசைக் கலை, தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இருந்ததை தொல்காப்பியமும் சங்க நூல்களும் காட்டுகின்றன. யாழினையும் பறையையும் பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் காலத்திலேயே இசையையும் கூத்தையும் துணையாகக் கொண்டு வாழ்வு நடத்திய கலைத்துறையினர் தனிப் பிரிவாக இயங்கினர் என்பதனை ஆற்றுப்படை இலக்கணத்தின்வழி காணலாம். சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகள், பண்ணிசை முறை, இசைவாணர்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெறுகின்றன. பாணர் என்னும் தரப்பினர், தங்களின் வாழ்வை இதற்காகவே அர்பணித்தவர்கள்
மலைச்சாரல் சார்ந்த தினைப்புனத்தில் தினையென்னும் தானியத்தை உண்ண முனைந்த ஒரு யானை, குறவர் குலப் பெண் பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு உண்பதை மறந்து நின்ற தகவலை யெல்லாம் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
இத்தகைய சிறப்புக்குரிய இசைக் கலையை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து உலகத் தமிழ் இசை மாநாட்டை வருகின்ற நவம்பர் 20-ஆம் நாளில் நடத்த முனைந்து வருகிறது.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவிஞர் டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார்.
தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகள் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தமிழ் இசை மாநாட்டில் தமிழர்தம் பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சியும் தமிழிசை தொடர்பான ஆவண குறும்பட வெளியீடும் இடம்பெற உள்ளன.
இந்த இம்மாநாடு தொடர்பில் வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு தமிழ் இசை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகளை worldtamilmusiccon2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த தகவலை மேலும் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிஞர் டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணனுடன்(+6 012 500 6161) தொடர்புக் கொள்ளலாம்.













