LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறார்கள் – இரண்டாம் பகுதி உதயனின் சிறப்பு கள ஆய்வுக் கட்டுரை

Share

சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்

எச்சரிக்கை: 

  1. பலவீனமானவர்கள் வாசிப்பதைத் தவிர்க்கவும்.
  2. பெயர்கள் மற்றும் வாழ்விடங்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டுள்ளன.

”இலங்கையில் ஏழ்மையில் உழலும் இலட்சக்கணக்கானவர்களால் இனியும் போதிய உணவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளனர், மேலும் இனி வரும் வாரங்களில் மேலும் மோசமடையலாம்” உலக உணவுத் திட்டத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் இந்த வாரம் கொழும்பில் தெரிவித்த கருத்து இது.

அதுமட்டுமல்ல, உணவுப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக,  இலங்கையில் ஐந்தில் நான்கு வீடுகள் தமது உணவைக் குறைத்துக்கொண்டுள்ளன மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். நீண்டகால அடிப்படையில் அதன் தாக்கம் மோசமாக இருக்கக் கூடும். அதிலும் மிகவும் வறிய நிலையிலுள்ளவர்கள் அண்மைய பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொல்லொணா துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இளவயதில் உணவில்லாமல் இருப்பது, உடல் மற்றும் மனரீதியாக மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உலகின் பல பல்கலைக்கழக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு இளவயதில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடும், உடலுறுப்புகளின் வளர்ச்சியை பாதித்து உடலின் இயக்கத்தில் தடைகளை ஏற்படுத்தும். பன்னாட்டு ஆய்வு முடிவுகளின்படி பெண்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பூப்படையும் வயதில் மாற்றத்தை ஏற்படுத்தி, கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தி பேறுகாலத்தில் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் என்கிற கவலைகள் உலகெங்கும் உள்ளன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்நாட்டுப் போர் மற்றும் அதன் தாக்கமாக ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடிகளினால் மிகவும் பாதிக்கப்பட்ட சோமாலியாவையும், தெற்கு சூடானையும் உதாரணமாகக் கூற முடியும்.

ஆனால் இலங்கை அமைச்சர்களும் அதிகாரிகளும் பொய் சொல்வது மற்றும் தரவுகளை திரிபு படுத்தி மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர்கள் என்கிற விமர்சனம் உள்ளது. ஐ நாவின் உலக உணவுத் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கூறியதையும், கடந்த வாரம் யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர் கூறியதையும்  அமைச்சர்கள் ரமேஷ் பதிரண மற்றும் சுசில் பிரேமஜெயந்த மறுத்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் வாதத்திற்குக் கூட ஏற்க இயலாத ஒன்று. 

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நாடுகள்  பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்திலுள்ளது  என்று தரவுகள் மற்றும் ஆதாரத்துடன் கூறும் யுனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, “நாடு இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சிறார்களிடையே போஷாக்கின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கலாம்” என்கிறார். இதையேதான் ஐ நா அறிக்கையும் கூறுகிறது என்பதை அவர் சிந்திக்கவில்லை என்றே தெரிகிறது.

அதுமட்டுமின்றி, “சுகாதார அமைச்சின் குடும்பநல திணைக்களங்கள் பாடசாலை சிறார்களிடையே 2016 ஆம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை ஒப்பிடும் போது, 2020 ஆம் ஆண்டு அந்த சிறார்களிடையே மோசமான போஷாக்கின்மை அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது” என்றும் அவர் கூறுகிறார். நாட்டிலுள்ள சுமார் 1.8 மில்லியன் பாடசாலை மாணவர்களில், 25 வீதம் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் உணவளிக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர். அப்போது இயற்கையாக எழும் அடுத்த கேள்வி என்பது எஞ்சியுள்ள 75% அதாவது 1.35 மில்லியன் குழந்தைகளின் நிலை என்ன என்கிற கேள்வி நாட்டில் எழுப்பப்படவும் இல்லை, எழுப்பினாலும் பதில் கிடைக்கப்போவதில்லை.

ஆக மொத்தம், இன்று சிறார்களிடையே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்குப் பகுதியிலும், மலையகத்திலும் இது மிகவும் மோசமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ள தலை சுற்றவைக்கும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். ஐ நா, உலக உணவுத் திட்டம், உலக வங்கி, சொந்த நாட்டின் சுகாதார அமைச்சு, சிறப்பு வாய்ந்த வல்லுநர்கள் ஆகியோரின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் அமைச்சர் கூறிய கருத்து உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எப்படி பார்க்கப்படும் என்பதை அவர் உணர்ந்தாரா என்பதை காட்டுவதாக இருக்கிறது.

இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து சோமாலியா போன்று ஆகிறதா இலங்கை? கடந்த ஜூன் மாதமே உதயனில்  கட்டுரை வெளியானது.

ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பில் யுனிசெஃப் அறிக்கை மறுதலிக்கும் அமைச்சர், அண்மைய தரவுகளின் அடிப்படையில், கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையில் சிறாரின் ஊட்டசத்து அளவு அதிகரித்து  வருகிறது என்று கூறுகிறார். கடந்த 2009 ஆண்டில் சிறார்களிடையேயான 27.4 வீதமாக இருந்த ஊட்டச்சத்துக் குறைபாடு, 2021 ஆம் ஆண்டில் 12.2 வீதமாகக் குறைந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இது அவரது சக அமைச்சர் சுசில் பிரேமஜெய்ந்த கூறியதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

ஆனால், உண்மையில் களநிலைமை என்ன என்பதை ஆராய கனடா உதயன் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள நான்கு பெண் தலைமைத்துவ குடும்பங்களை தொடர்புகொண்டு நாட்டின் பொருளாதார நிலை, குடும்பத்தை நடத்திச் செல்வதிலுள்ள சிக்கல், பிள்ளைகளிடையே போஷாக்கின்மை, பொலிஸ் மற்றும் இராணுவத்திடமிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஆகியவை குறித்துப் பேசியது.

சரோஜினி, சல்மா, சகாயமேரி, சலோமி ஆகியோருக்கு இடையே ஒற்றுமை ஒன்று உள்ளது. இவர்கள் அனைவருமே போரினால் பாதிக்கப்பட்டவர்கள். உழைத்து தமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கடமையுடையவர்கள். இதில் சரோஜினி நாட்டின் வடக்கு மாகாணத்திலும், சலோமி நீர்கொழும்பிற்கு அருகிலும் வாழ்பவர்கள். சகாயமேரி புத்தளத்திலும், சல்மா அம்பாறையிலும் வாழ்பவர்கள்.

‘சரோஜினி மற்றும் சலோமியின் குடும்பம் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடுபவர்கள். இருவரது கணவரும் போர்க்காலத்தில் இடம்பெற்ற இரு தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்கள். ஆனால் சலோமிக்கு அரசு மற்றும் சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு சரோஜினிக்கு கிடைக்கவில்லை. எனினும் கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் குடும்பச் சூழலில் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களால் போதியளவில் உணவை அளிக்க முடியவில்லை என்றனர். அவர்கள் இருவரும் கூறியதன் அடிப்படையில் இருந்த ஒரு விஷயம் ”எரிபொருள் இல்லை அதனால் எமக்கு எதிர்காலம் இல்லை”.

“கடந்த சுமார் ஓராண்டாகவே மீன்பிடி தொழிலுக்கு மிகவும் அவசியமான மண்ணெண்ணெய் கிடைப்பத்தில் கடும் தட்டுப்பாடு நிலவியது. மேலும் எங்களுக்கு தொழிலுக்காக உள்ளூரில் கடன் கொடுத்தவர்கள், உடனடியாகப் பணத்தை திருப்பித்தர அழுத்தமும் அச்சுறுத்தலும் விடுத்தனர். இதனால் சந்தையில் என்னால் மீன் விற்பனையைச் செய்ய முடியவில்லை. எங்கள் கடன் காரணமாக எமது குடும்பத்திலிருந்த படகை கடன் கொடுத்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். வருமானம் இல்லாததால் எனது பிள்ளைகளுக்குத் தேவையான உணவு மற்றும் பால் மாவை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி சுகயீனை அடைகின்றனர், மருத்துவச் செலவிற்கும் பணமில்லை” என்று கூறினார் சலோமி. தமது குடும்பத்தாரால் இப்போது ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட முடிகிறது, இருவேளை உணவு என்பதை எண்ணிப்பார்க்க முடியாது என்று சலோமி கூறியபோது அவரால் தனது அழுகையை அடக்க முடியவில்லை.

சரோஜினியின் குடும்பத்தில் அவரது கணவர் உட்பட இருவர் மாவீரர்கள். போரின் காரணமாக இவர் சிறிது அங்கவீனம் அடைந்துள்ளார். சலோமிக்கும் இவருக்கும் பிரச்சனைகள் ஒரே மாதிரியிருந்தாலும், இவரது குடும்பத்திற்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவரது இரண்டு பிள்ளைகளின் கற்றல் செயல்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் போதிய உணவின்றி இரு பிள்ளைகளும் அடிக்கடி சுகயீனம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை  பெறவேண்டியதாயிற்று. அதிலும் பெண்பிள்ளை போதிய உணவின்றி ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது தனக்கு மிகுந்த கவலையளிக்கிறது என்று அவர் வருந்தினார்.

“இந்த பெண் பிள்ளைக்கு என்னால் போதிய உணவை அளிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக போதிய உணவும் ஊட்டச்சத்தும் இல்லாமல் இருந்தால், அவள் பருவ வயதை அடையும் போது சில சிக்கல்கள் எழக்கூடும் என்று மருத்துவர் கூறுகிறார். இது எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது”

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மீனவர்களின் வருகை, அரசின் தவறான கொள்கைகள் காரணமாகத் தொடர்ச்சியாக தங்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை என்றும், அப்படியேச் சென்றாலும் முதலீட்டிற்கு ஏற்ற வருமானம் இல்லை என்பதால், கடந்த பல ஆண்டுகளாகவே `ஒருவேளை உணவு` என்பதே வழக்கமாகிவிட்டது என்றார்.

இந்த இரு குடும்பத்தைப் போன்று இலங்கையில் லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்விற்கு மண்ணெண்ணெய் என்பது அத்தியாவசியமானது. ஆனால் அதைச் சீராக அரசால் விநியோகிக்க முடியவில்லை. நாட்டின் நிலவும் உணவு நெருக்கடி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு ஏற்க மறுக்கிறது அல்லது மறைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சகாயமேரியின் குடும்பமும் போரினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த நிலையில் இடம்பெற வேண்டியதாயிற்று. அவரது கணவர் முச்சகர வாகனம் ஒன்றின் சாரதியாக இருந்தவர். மன்னார் பகுதியில் தொழில் செய்வதிலிருந்த சிக்கல்கள் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தனர். எனினும் இரு மாவட்டங்களுக்கு இடையே வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். கணவரின் உயிரிழப்பால் குடும்பத்தை முன்னெடுக்க முடியாமல் திணறிகொண்டிருந்தச் சூழலில், கொரோனா பெருந்தொற்றும் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளியது என்றும், பிள்ளைகளின் நலன் கருதி அதைக் கைவிட்டதாகவும் கூறுகிறார். 

”எந்த பிள்ளைகளின் நலனிற்காக வாழ நினைத்தேனோ, அவர்களுக்கு போதிய உணவை அளிக்க முடியவில்லை, ஒரு தாய் என்ற வகையில் மிகவும் துன்பமடைகிறேன். அவர்களின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறேன்”.

அம்பாறை மாவட்டத்தில் சிறிய தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தவர் சல்மாவின் கணவர். பொருளாதார நெருக்கடியால் வியாபாரம் படுத்துவிட்டது. உடல்நல பாதிப்பால் அண்மையில் மரணமடைந்தார். வீட்டையும் கவனித்துக் கொண்டு வெளியே வியாபாரத்தையும் சல்மாவால் கவனிக்க முடியவில்லை. அரச உதவிகளும் போதியளவில் கிடைக்காத நிலையில், தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க குடும்பத்தாரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில், வெளியில் சொல்ல முடியாத தர்ம சங்கடங்களை தான் எதிர்கொள்வதாகக் கூறினார்.

“தன்னார்வ அமைப்புகள் அளிக்கும் உணவு மற்றும் உதவிகள் மூலமே வாழ்ந்து வருகிறோம். இன்னும் எவ்வளவு காலம் இது செல்லும் என்று தெரியவில்லை. போதிய உணவின்றி பிள்ளைகள் அடிக்கடி சுகயீனம் அடைகிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் சுகயீனம் அடைவதால் எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் மரணமடைந்தால் எனது பிள்ளைகள் நிலை என்னவாகும்?”

ஆரோக்கியமில்லாத ஒரு நாடு அழிவை நோக்கிப் பயணிக்கிறது என்பது முதுமக்கள் சொல்லாகும்.