‘மோடயாக்கள்’; யார்? தமிழர்களா? சிங்களவர்களா?
Share
வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
* மனித உரிமைப் பேரவையால் வீழத்தப்பட்டது என்ற பரபரப்புச் செய்திகளுக்கூடே சிங்கள தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
மனித உரிமை பேரவை இலங்கை குறித்து தமிழர் விவகாரத்துடன் காலத்துக்குக் காலம் அகல கால் வைத்துக் கொண்டு போகின்றது. அண்மைக் காலமாக
* உயிர்த்த ஞாயிறுபற்றி தனது நிகழ்ச்சி நிரல்களுக்குள் எடுத்துக் கொண்டது.
* பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்தும் இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றது. * இப்பொழுது ‘ அரகல‘ போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களின் விடுதலை குறித்தும் பேசுகின்றது.
* ஊழல்மிக்க அரச அதிகாரிகளுக்கு எதிராக சுயாதீன பக்கச் சார்பற்ற வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தி தண்டனை வழங்குதல்
* உள் நாட்டுப் பொறிமுறையில் சுயாதீனத்தன்மை வெளிப்படைத் தன்மை இல்லாமையினால் மனித உரிமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்படுகின்றமையினால் மனித உரிமைகள் இழிவுபடுத்தப்படுகின்றது என்று கரிசனை காட்டுகின்றது.
* இராணுவமயமாக்கல்பற்றி சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு செவி சாய்க்காமைபற்றி குரல் எழுப்புகின்றது.
* ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்அச்சுறுத்தப்படுகின்றமைகுறித்தும் போசுகின்றது.
* மனித உரிமை மீறல்கள் அறவழிப் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம்குறித்தும் கவனம் செலுத்துகின்றது.
* இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்தும் பேசுகின்றது.
* அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கி மஹிந்த ராஜபக்சக்களின் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான நிகழ்ச்சிநிரலையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
மொத்தத்தில் அமெரிக்க மேற்கத்தைய நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப இந்த நாடுகள் ஜநா மனித உரிமை பேரவையை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மனித உரிமைப் பேரவையில் நம்பிக்கை வைத்த தமிழ் மக்கள் ‘இலவு காத்த கிளியாக‘ விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். அதாவது ஜநா மனித உரிமைப் பேரவையில் தமிழர் விவகாரம் பத்துடன் பதினொன்ராக உள்ளது என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
ஆனால் சிங்கள தேசம் மனித உரிமைப் பேரவையால் வீழத்தப்பட்டது என்ற பரபரப்புச் செய்திகளுக்கூடே தலை நிமிர்ந்து நிற்கின்றது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவை வீறு கொண்டெழுந்து வீழ்த்திவிடும் என்ற பரபரப்புச் செய்திகளுக்கூடே நல்லாட்சி அரசாங்கம் மனித உரிமைப் பேரவை அரங்கில் நுழைந்து ‘தகர்ந்த போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை‘ என முழங்கி பேரவையின் இணை அனுசரணையாளராகி வென்றது.
மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இன்றைய பிரதமரான தினேஷ;குணவர்தனா பேரவை அரங்கில் நுழைந்து இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இப்பொழுது உள்ளகப் பொறிமுறையில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி பேரவையில் முழங்கியுள்ளார். நாடு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மீண்டெழ எந்தப் பேயுடனும் சரணாகதி அடைய தயாராக இருக்கும் ஒரு அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் முதலீடு கோரி கையேந்தி நிற்கும் அரசாங்கம் தமிழர் விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தி நிற்கின்றது.
அப்படியானால் யார் ‘மோடயா‘ சிங்களவர்களா?
‘மோட்டுச் சிங்களவர்கள்‘ என தமிழர்கள் கூறுவது உண்மையா? சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களிடையே பிரபலமாக பேசப்பட்ட வார்த்தை இது.
இந்த ‘மோட்டுச்‘ சிங்களவர்கள்தான் இந்தியா உற்பட சர்வதேசநாடுகளுக்கும் தமது ராஜதந்நிர நகர்வுகளின்மூலம் ‘இடியப்பம் தீ;த்திக்‘ கொண்டிருக்கின்றனர். சிங்கள ராஜதந்திரத்தின் முன் இந்த நாடுகளின் ராஜதந்திரம் தோற்றுப்போய் நின்ற பல பதிவுகளை உலக அரங்கில் இலங்கை பதிவு செய்துள்ளது.
இதற்குள் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இலங்கை குறித்த இந்திய ராஜதந்திரம் தோற்றுப் போனதன் விளைவு இந்தியா பக்கம் இன்று தமிழர்களும் இல்லை சிங்களவர்களும் இல்லை. இலங்கை அரசாங்கமும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
உண்மையில் ‘மோடயாக்கள்‘ தமிழர்கள்தான். குறிப்பாக தமிழ்த் தலைமைகளும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுமாகும். தமக்கிடையே ஒற்றுமை இன்மையால் தமிழினத்தின் வீடுதலை நோக்கிய பயணத்தை தடுத்து நிற்கும் தடைக்கற்களாக இந்தத் தமிழ்த் தலைமைகள் நிற்கின்றனர்.
சேர். போன் இராமநாதன் சேர்.பொன் அருணாச்சலம் ஜிஜி.பொன்னம்பலம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முதலாக இன்றைய தமிழ்த் தலைமைகள்வரை சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் தோற்றுப்போய் நிற்பவர்கள்தான் ‘சிங்களயோ மோடயா‘ என தமிழர் தரப்பால் கூறப்பட்டவர்கள்தான் தமிழ்த் தலைமைகளையே தோற்கடித்து நிற்கின்றனர்.ஆனால் தமிழ்த் தலைமைகள் இந்தத் தோல்விகளில் இருந்து பாடங்கற்றதாக இல்லை.
மொத்தத்தில் இந்தத் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இயங்க முன்வரவேண்டும்.
இல்லையேல் தமிழ்மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிவில் சமூகங்களுடன் இணைந்து புதிய தலைமையை நோக்கி நகர்வதன் மூலமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். தமிழினத்தின் தலை விதியை தீர்மானிக்க முடியும். எல்லாமே தமிழ் மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.













