சாட்டி மாவீரர் நினைவிட வழக்கு சட்ட விவகாரத்தால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பெற்றது
Share
சாட்டி மாவீரர் நினைவிடத்தில் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காணி உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு 17ம் திகதி அன்று செவவாய்க்கிழமை அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் நீதிமன்றில் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
இதன்போது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை என எதிராளிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், தமது தரப்பு நியாயங்களையும் மன்றில் எடுத்துரைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய சட்டப்பிரிவு குறிப்பிடப்படாத நிலையில் குறித்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டி, வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், குறித்த விடயம் மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், எந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன், ஸ்ரீராகவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது













