மரகதமணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
Share
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது.
நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகி, சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) குறுகிய பட்டியலில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
எம்.எம். கீரவாணி (மரகதமணி) இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.
ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதையும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம் பெறும் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்தது.
லாஸ் ஏஞ்சல்ஸில் (மார்ச் 13) நடைபெற்ற 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.













