செந்தில் பாலாஜி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டாரா…? அண்ணாமலை பேட்டி
Share
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில்பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் உள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மெக்கானிக், நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதில் மூன்று பேருடன் சேர்ந்து பணம் வாங்கியுள்ளனர்.
2014ல் இது நடைபெற்றது. 2018ல் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கிறார். 2019ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு மிக வேகமாக நகர்கிறது. பணம் வாங்கியதாக 2018ல் புகார் தெரிவித்தவர்கள், வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி கொடுத்து விட்டனர் என கூறி வழக்கை திரும்ப பெற்றனர். இதை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. 2022ல் உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவை சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு தெரிவித்தது. மொரிசியல் உட்பட வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்று குற்றப் பத்திரிகையில் தெரிவித்ததன் காரணமாக அமலாக்கத்துறை தலையிடுகிறார்கள். சோதனை நடத்துகிறார்கள்.
2016ல் மு.க.ஸ்டாலின் குளித்தலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்கை குறித்தும் பேசியுள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கு உள்ளது? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒரு நபரை, முதல்வர் சந்தித்தது, அது காட்சி ஊடகத்தில் செய்தி வெளியாவது மக்கள் மனதில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பும். கனிமொழி கைதான போது கூட இத்தனை பேர் சென்று பார்க்கவில்லை. அந்த அளவு செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலமாக இருக்கிறார் என்பது தெரிகிறது” என்று குற்றம்சாட்டினார்.













