LOADING

Type to search

இந்திய அரசியல்

பொறியியல் தர வரிசையில் 102 பேர் 200-க்கு 200 – திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்

Share

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார். தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்