இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
Share
இடைநிலை ஆசிரியர் பணி நியமன விவகாரம் குறித்து விரைவில் நிதித் துறை வாயிலாக கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவையில் இன்று (ஜூன்.27-) நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ”சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட எந்த பள்ளியாக இருந்தாலும் சரி, தமிழ் கட்டாயம் கற்பிக்கப்படுறதா என்பதை உறுதி செய்து வருகிறோம். மாணவர்களின் விவரங்கள் கசிவதாக துறை கூட்டத்தில் கேட்போது, 2018-ல் அளிக்கப்பட்ட விவரங்கள் வெளியானதாகவும், தற்போது ஏதும் கசியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இனிமேல் அதுபோன்று நடக்காத வகையில் பார்த்துக்கொள்வது எங்களது கடமை” என்றார்.
கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தரமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்காக காத்துக் கொண்டுள்ளனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றுதான் அரசு நினைக்கிறது. ஏறத்தாழ டெட் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஏதாவது ஒருவகையில் அவர்களை தேர்வு செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். இல்லையெனில், ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்துதை நிறுத்திவிட வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்குறுதியையும் வழங்கி உள்ளோம். சட்டத் துறை, மனித வளத்துறை ஆகியவற்றுடன் நிதித்துறை செயலர் வாயிலாக மிக விரைவில் இதுதொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு காண வேண்டும். நிதி எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.













