கடலூரில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை
Share
கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி சாந்தி (40). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மதியழகன் அருகில் வந்தனர். அந்த நபர்கள் கையில் வீச்சரிவாளுடன் தன்னை கொலை செய்வதற்கு வருவதை அறிந்த மதியழகன், அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார். அந்த கும்பல் மதியழகனை துரத்தி சென்று சுற்றி வளைத்தனர். நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர்.
மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை சம்பவ இடத்தில் வீசி சென்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்தியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர். இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார். அப்போது மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.













