LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் 90 அடி ஆழத்தில் மண்ணுக்குள் புதைந்த நாகர்கோவில் தொழிலாளியின் உடல் மீட்பு

Share

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன்(வயது 55). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தொழில் தேடிச் சென்றார். வெங்காணுரில் கூலித் தொழில் செய்து வந்தார். அப்போது அங்கேயே திருமணம் செய்து குடியேறினார். இவருக்கு செல்வி என்று மனைவியும்

பபிதா, சபிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மகாராஜன் கிணறு வெட்டுவது மற்றும் கிணறு சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(8ம் தேதி )

விழிஞ்ஞம் அருகே உள்ள முக்கோலை பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டு கிணத்தை சுத்தப்படுத்துவதற்காக சென்றார். அவருடன் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்த சேகர், கண்ணன், மோகன், மணிகண்டன் ஆகிய நான்கு தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர்.

மிகவும் குறுகிய 90 அடி ஆழம் கொண்ட அந்த கிணறு 30 வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்டதாகும். கிணற்றை சுத்தப்படுத்துவதற்கு முன்பு மோட்டார்,உபகரணங்களை வெளியே எடுப்பதற்காக மகாராஜன் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் இருந்து காங்கிரீட் வளையங்கள் மண்ணுடன் சேர்ந்து மகாராஜனின் மேல் விழுந்தது.

இதில் மற்ற 4 தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மகாராஜன் மட்டும் 90 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து உடனே அவரை மீட்க தொழிலாளிகள் முயன்றனர். ஆனால், கிணற்றில் ஊற்று அதிகமாக இருந்ததாலும், மண் சரிந்து விழுந்ததாலும், மீட்பு பணியை தொடர முடியவில்லை. இதுகுறித்து அறிந்ததும்

விழிஞ்ஞம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர்.

ஆனால், அவர்களாலும் மகாராஜனை மீட்க முடியவில்லை. கொல்லம் அருகே உள்ள பூயப்பள்ளி என்ற இடத்தில், கிணற்றில் சிக்குபவர்களை மீட்கும் திறமை பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். உடனடியாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கடுமையாக முயற்சித்தும் மகாராஜனை மீட்க முடியவில்லை.

இதற்கிடையே நேற்று (9ம் தேதி )

பூயப்பள்ளியை சேர்ந்த தொழிலாளர்கள் 80 அடி ஆழத்தில் இறங்கி பார்த்ததில் மகாராஜனின் கை மட்டும் தெரிந்தது. ஆனால், அவரது அருகே செல்ல முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை முயற்சித்தும் அவரை மீட்க முடியவில்லை. இதற்கிடையே ஆலப்புழாவில் இருந்து 25 பேர் அடங்கிய பேரிடர் மீட்பு

படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அதிகாலை முதல் மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், தொழிலாளர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து மகாராஜனை மீட்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், 50 மணி நேர போராட்டத்தின் முடிவில் மகாராஜனை இறந்த நிலையில் தான் மீட்க முடிந்தது.

மகாராஜனின் மேல் 15 அடிக்கு மேல் மண் விழுந்ததாலும், நீர் ஊற்று அதிகமாக இருந்ததாலும், கிணற்றின் அகலம் மிகவும் குறைவாக இருந்ததும் தான் மகாராஜனை உயிருடன் மீட்க முடியாமல் போனது என்று

தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.