LOADING

Type to search

இந்திய அரசியல்

“எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி”

Share

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று (ஜூலை 18) தொடங்கியது.

24-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

24 கட்சிகளின் தலைவர்கள்

“மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2 நாட்கள் பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவை வீழ்த்த பீகார், கர்நாடகம் என தொடர்ந்து கூட்டப்படக் கூடிய கூட்டம், பாஜக ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிபாடு தான், அமலாக்கத்துறை அவர்களால் ஏவப்படப்பட்டுள்ளது.

ஏற்கனவே வட மாநிலத்தில் இந்தப் பணியை செய்து கொண்டு இருந்தவர்கள், தற்போது தமிழகத்திலும் இந்தப் பணியை தொடங்கி உள்ளார்கள்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாகத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

2 வழக்குகளில் விடுதலை

அண்மையில் பொன்முடி மீது கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்ட 2 வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதை வழக்கை சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் பதில் அளிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப பாஜக செய்து கொண்டு இருக்கும் தந்திரம்தான் இது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ் பாரதி பேட்டி

இதற்கிடையே, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற சைதாப்பேட்டை வீட்டுக்கு வருகை தந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“முதல்வர் தனது பிறந்த நாள் விழாவில், யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பது தான் முக்கியம் என்று பேசினார். அதன் பிறகு தொடர்ந்து மத்திய அரசு, ஆளுநர் மூலமாக சில நெருக்கடிகளையும், தற்போது அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடிகளையும் தந்து கொண்டுள்ளது.

பாட்னா-செந்தில்பாலாஜி

பெங்களூரு-பொன்முடி

முதல்வர் ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டபோது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்றது. தற்போது பெங்களூரு கூட்டத்தின் கவனத்தை திசை திருப்பவே பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருகிறது.

எந்த வழக்கு என்று தெரிந்துகொள்ள, அவரின் வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது. ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. சட்ட ஆலோசனை வழங்குவதற்குக் கூட உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்கில் நெருக்கடி அளிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது.”

இவ்வாறு அவர் கூறினார்.