பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்!
Share
நடிகர் விஷ்ணுவிஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வலம் வந்த விஷ்ணு விஷால், தற்போது சினிமாவில் கதாநாயகனாக கலக்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கட்டா குஸ்தி படம் வெற்றியடைந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப்படத்தில் லீட் கதாபாத்திரங்களில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, “என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் வெளியீடு ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.













