“எங்களுக்கு பிரதமர் பதவி முக்கியமல்ல” காங்கிரஸ் தலைவர் கார்கேஅறிவிப்பு
Share
காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியோ அல்லது அதிகாரமோ முக்கியமல்ல என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
”சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே.
மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தது அல்ல. மேலும், அந்த வேறுபாடுகள் பெரியதும் அல்ல. ஆகையால் சாமானிய மக்களின் நலனுக்காக, நடுத்தர வர்க்க மக்களுக்காக, இளைஞர்களுக்காக, ஏழைகளுக்காக, பட்டியலின மக்களுக்காக, பழங்குடியினருக்காக, சிறுபான்மையினருக்காக, திரைமறைவில் நசுக்கப்படும் அவர்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக நாம் ஒன்றிணைவோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகம் யார் என்ற கேள்வி இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியான நாள் முதலே விவாதிக்கப்பட்ட சூழலில், மல்லிகார்ஜுன கார்கேயி ன் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நரேந்திர மோடியே இருப்பார் என்பதை பல தருணங்களிலும் பாஜக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.













