2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது – ரிசர்வ் வங்கி
Share
புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனையடுத்து, வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் அதற்கு அடையாள ஆவணமோ, சீட்டோ தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதற்கிடையில், அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 75% திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 88% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.













