ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
Share
ராகுல்காந்தி சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இனி எம்.பியாக அனைத்து கூட்டத்தொடர்களிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு மோடி சமூகத்தவர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தனது வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்தார். தீர்ப்புக்கு எதிரான ராகுல் காந்தியின் மனுக்களை குஜராத் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த ராகுல் காந்தி, இந்த வழக்கில், நான் குற்றமற்றவன் என்று கூறியுள்ளார். மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு அளித்த தண்டனை நிலைக்க தக்கதல்ல என்றும், வருத்தம் தெரிவிக்க சொல்லியிருந்தால் அதை முன்பே செய்திருப்பேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த நிலையில், இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?. தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாட்கள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.










