மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
Share
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்களை பங்கேற்க செய்ய அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக பணியாற்றும் படி மாவட்ட செயலாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்தது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் தொண்டர்களை மதுரை மாநாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை மாநாட்டில் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் சந்திப்பில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.










