LOADING

Type to search

இந்திய அரசியல்

‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே… இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது ’-ராகுல்காந்தி

Share

“வாய்மையே வெல்லும்”  -பிரியங்கா

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இன்று (ஆக 4)  இடைக்கால தடை விதித்தது.

இதன்மூலம், தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக முடியும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘உண்மையை மறைக்க முடியாது’ 

இந்த உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை – கவுதம புத்தர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “வாய்மையே வெல்லும்” என்றும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே… இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ என்று தெரிவித்துள்ளார்.

வெறுப்புக்கு எதிரான வெற்றி

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி, சத்யமவே ஜெயதே. ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளது.

உலகமே சபாநாயகரைப் பார்க்கிறது

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், “சபாநாயகர் இப்போது முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும், உலகமும் சபாநாயகரை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றன. தாமாகவே தகுதி இழப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அதுதான் நமது தேவை நாட்டுக்கானத் தேவை. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற உத்தரவு நகலுடன் சபாநாயருடன் கோரிக்கை வைப்பார்கள்” என்று கூறினார்.

 “உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிரான சதிச்செயல் இன்று தோல்வியடைந்துள்ளது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். ராகுல் காந்தியின் தகுதி இழப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து நான் சபாநாயகருக்கு எழுதுவேன்” என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கம் மீண்டும் கர்ஜிக்கும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் சிங்கம் மீண்டும் கர்ஜிக்க இருப்பதால் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை சபாநாயகர் ரத்து செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.