கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Share
விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் மகன் முகம்மது மகிர் தலையில் நீர் கோர்த்தல் பிரச்னை இருத்தால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வலது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் கை கருப்பாக மாறி அழுகியதால் அதனை மருத்துவர்கள் அகற்றினர். இதற்கிடையே தவறான சிகிச்சை அளித்து மகனின் கையை அகற்றிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் தாயார் புகார் அளித்திருந்தார்.
இதன்பின்னர் குழந்தை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததது. இந்த விவகாரம் குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள். மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன். அலட்சியம், அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிருபணம் செய்கிறது என்று கூறியுள்ளார்.













