சொத்துக் குவிப்பு வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
Share
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதனடிப்படையில் சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் விஜயபாஸ்கரையும் அவரது மனைவியையும் வரும் 29 ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













