சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
Share
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. ‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி நிலவு சுற்றுவட்டப்பாதையில் குறைந்தபட்சம் 164 கி.மீ., அதிகபட்சம் 18 ஆயிரத்து 74 கி.மீ. என்ற அளவில் உயரம் குறைக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், ‘சந்திரயான்-3’ 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்க இருக்கிறது. இதனையொட்டி ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் இறங்கினர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும். விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நெருக்க உள்ளது.













