திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
Share
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.
திமுக.வை சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், 2 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், 2 அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது, அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும், விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றும் வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் விடுவிக்க கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இரு உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, இரண்டு அமைச்சர்களை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் கடமை தவறியதாகி விடும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல என்றும் நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2021க்கு பிறகு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.












