தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சிறீ சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது என கட்சி தலைமையை தாக்கிய விந்தன்
Share
பு.கஜிந்தன்
தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது – கட்சி தலைமையை போட்டுத்தாக்கிய விந்தன்
தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் வவுனியா சீனி தொழிற்சாலையை பெறுவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
நேற்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நைனாமடுவில் சீனி தொழிற்சாலையை கேட்டார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .
குட்டிமணி, தங்கதுரை, சிறீ சபாரத்தினம் போன்றவர்களால் வழி நடத்தப்பட்ட எமது கட்சி அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக விலை போக முடியாது.
வவுனியா நயினாமடுவில் சீனி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட போவதாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் சீனி தொழிற்சாலைக்கும் எமது கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இன்று அது உண்மையாகி விட்டது. நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மாடு மாதா ஆலயத்தில், செல்வம் அடைக்கலநாதன் சீனி தொழிற்சாலையைக் கேட்டார் அதனை வழங்கினோம் என கூறிவிட்டார்.
வவுனியாவில் சீனித் தொழிற்சாலையை எமது கட்சி தான் கேட்டது என பிரதேச அமைப்பாளர்களுக்கோ தலைமை குழு உறுப்பினர்களுக்கோ தெரியாது அது பற்றிய எம்மிடம் பேசவும் இல்லை.
மாடு மாதா ஆலயத்தில் வைத்து சீனி தொழிற்சாலையை எமது கட்சி தான் கேட்டது நான் வழங்கினேன் என ஜனாதிபதி கூறிய போது தான் எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
தமிழ் மக்களுக்களின் அரசியல் தீர்வுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நாம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் தீர்வுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இவ்வாறான நிலையில் எமது அரசியல் தீர்வுகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்திடம் சீனி கேட்பதற்காக மக்கள் அங்கீகாரம் தரவில்லை.
எமது கட்சியின் மறைந்த தலைவர் சபாரத்தினம் தமிழ் மக்களின் கொள்கைக்காக போராடினார் அவரின் வழியில் நாம் மக்களுக்காக போராடி வரும் நிலையில் அரசாங்கத்தின் சலுகைகளுக்காக விலை போக முடியாது.
தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் சீனி வாங்குவதற்காக எமது மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை.
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவில்லை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, ஜெனிவா தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சமஸ்டி தீர்வு வழங்கப்படாத நிலையில் சீனி தொழிற்சாலையை அரசாங்கத்திடம் கேட்டது ஏன்.
அவ்வாறே நீங்கள் அரசாங்கத்திடம் கேட்பதற்கு முன்னர் எமது மக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்க வேண்டும் அத்தோடு காட்சி உறுப்பினர்களுக்கு இதைப் பற்றி தெரியப்படுத்தி தலைமைக் குழுவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
எமது தலைவர் சில மாதங்களுக்கு முன்னர் சீனித் தொழிற்சாலை தொடர்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் நாங்கள் சீனி தொழிற்சாலை கொண்டு வரவில்லை என கூறிய நிலையில் நாட்டின் ஜனாதிபதியே உண்மையை கூறிவிட்டார்.
மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது குறித்த சீனித் தொழிற்சாலை தொடர்பில் பேசப்பட்ட போது அப்போதைய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் எதிர்ப்பை வெளியிட்டார்.
அது மட்டுமல்லாது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் முன்னாள் மாகாண அமைச்சர் பவன், பாராளுமன்ற உறுப்பினரான வினோ போன்ற பலர் நைனாமடு சீனி தொழிற்சாலைக்கு தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்றார்.
இதன் போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் ஒருவர் வவுனியாவில் அமையப் பெறவு ள்ள குறித்த சீனி தொழிற்சாலைக்கு தாய்லாந்து நிறுவனத்திற்கு சீன நிறுவனம் ஒன்று நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என எழுப்பினார்.
இதன்போது பதில் அளித்த விந்தன் தாய்லாந்து நிறுவனம் இயந்திரங்களை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக மட்டுமே என நான் அறிகின்ற நிலையில் குறித்த தாய்லாந்த நிறுவனத்திற்கு எங்கிருந்து பாரிய நிதி வருகின்றது என்பது எனக்கும் தெரியாது.
வவுனியா சீனி தொழிற்சாலை மற்றும் கரும்பு உற்பத்தி சுமார் 14ஆயிரம் ஏக்கரில் இடம்பெறப் போவதாக தெரியவரும் நிலையில் கொழும்பு துறைமுக நகரத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகைக்கு ஒப்பான பாரிய தொகை செலவிட ப்படவுள்ளது.
குறித்த நிதி தாய்லாந்து நிறுவனத்திற்கு எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பும் கேள்வி நியாயமானது அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும்.
தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தி அல்ல அரசியல் தீர்வு என்பதை அரசாங்கத்திடம் அபிவிருத்தியை கேட்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துடன் இணைந்து கந்தளாய் சீனி தொழிற்சாலையை கொண்டு வந்தார் இன்று சீனி தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் தமிழ் கிராமங்கள் பல சிங்களக் கிராமங்களாகிவிட்டன.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது, காங்கேசன்துறை சீமந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது, முல்லைத்தீவில் ஓட்டுத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது, தீவகத்தில் அலுமினிய தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
ஆகவே பொன்னம்பலம் கொண்டு வந்த அபிவிருத்திகள் இன்றும் பற்றைகளால் சூழப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அபிவிருத்தி என்ற போர்வையில் எதை சாதிக்கப் போகிறார்கள் என்பதை எமது தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.