குற்றலாத்தில் கடைகளில் தீ விபத்து
Share
குற்றாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலானது. 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமானது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றாலநாதர் கோவில் தெற்கு பிரகாரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிற்பகல் 2:30 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. வியாபாரிகள் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் மேலும் பல கடைகளுக்கும், அருகில் சிற்றாற்றின் கரை பகுதியில் உள்ள மரங்களிலும் தீ பரவியது. இருப்பினும் 20க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமான. கடைகள் தீப்பிடித்து எரிந்ததும், சிலிண்டர்கள் வெடித்ததும் குற்றாலம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தை ஏற்படுத்தியது.













