உபி பள்ளிக்கூட வகுப்பறை போர்டில் மதவாசகம் எழுதிய மாணவன் மீது தாக்குதல்; ஆசிரியை கைது
Share
பள்ளிக்கூட வகுப்பறை போர்டில் மதவாசகம் எழுதிய மாணவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக தெரிகிறது.
இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை திருப்தி தியாகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை, “எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். அந்த மாணவனை மத ரீதியில் துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
மூட உத்தரவு
இந்த நிலையில், மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
பள்ளி மூடப்படுவதை தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்வா மாவட்டம் பெனி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் உள்ள போர்டில் மதவாசகம் எழுதியுள்ளார்.
இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவனை தாக்கிய ஆசிரியரை கைது செய்தனர்.













