மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி
Share
மணிப்பூரில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் வன்முறை நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குக்கி இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மெய்தி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்துள்ளது.
7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டுபாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் காவல்துறை, அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.













