ஓ.பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
Share
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியின்போது, வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை அதிகாரவரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்னைகள் உள்ளதாகக் கூறிய நீதிபதி, குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப் பட்டுள்ளதாகவும், எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம் என்றும் காட்டமாக தெரிவித்தார். 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய நீதிபதி, ஓ.பன்னீர்செல்வத்தை வழக்கில் இருந்து விடுவித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும், சொத்துக் குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் விடுவிக்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் ஒரேவிதமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதி, இதுபோன்று வழக்குகளில் இருந்த அரசியல் பிரமுகர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.













