இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு உள்பட 14 பேர் நியமனம்
Share
இந்தியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று (செப் 1) நடந்தது.
ஒன்றாக இணைந்து குழு புகைப்படம்
இதில், முதல் நிகழ்வாக தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
. இந்தக் கூட்டத்தில், இந்தியா கூட்டணி இப்போதிலிருந்தே ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்காக பல்வேறு குழுக்களை ஏற்படுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டது. குறிப்பாக, பொது சமூக ஊடக பக்கங்களை ஏற்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்கென கூட்டணிக் கட்சிகளின் சமூக ஊடகப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.2) நடைபெறும் என்றம் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணியின் முழக்கம்
இணையும் பாரதம், வெல்லும் இந்தியா’ என்பது கூட்டணியின் முழக்கமாக முடிவு செய்யப்பட்டது.
முதல் நாளில் இருந்தே இருந்தே இந்த முழக்கம் மும்பையில் எதிரொலிக்கத் தொடங்கியது. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி மும்பை வந்ததும் இந்த வாசகத்தையே முழங்கினார். ‘ஜூடேகா பாரத், ஜீதேகா இண்டியா’ என்ற முழக்கத்தை அவர் எழுப்ப, அங்கிருந்தவர்கள் பதிலுக்கு அதே முழக்கத்தை எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற குழு புகைப்பட நிகழ்வின்போதும் பின்னணியில் இந்த வாசகம் இடம் பெற்றது.
3 தீர்மானங்கள்
மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி சார்பில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம்:
முதல் தீர்மானம்: ‘எதிர்வரும் மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது என இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொகுதி பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், விட்டுக் கொடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையைக் கையாண்டு தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
இரண்டாம் தீர்மானம்: ‘மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
மூன்றாவது தீர்மானம்: ‘இணையும் பாரதம்; வெல்லும் இந்தியா ’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஊடக உத்திகளை வகுப்பது, தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’
ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
இந்த மூன்று தீர்மானங்கள் மட்டுமல்லாது, மற்றுமொரு முக்கிய முடிவாக, 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக எம்பி டி ஆர் பாலு, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் ஜாவெத் அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.










