பொதுமக்கள் போராட்டத்தையடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் 3 நாள் ஓணம் விழா கொண்டாட்டம்
Share
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இங்கு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பண்டிகை நடைபெறும் 10 நாட்களும் அரண்மனைக்குள் வண்ண கோலமிடுவது, ஊஞ்சல் கட்டுவது என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஆனால், பத்மநாபபுரம் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சமீபத்தில் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னை காரணமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு திடீரென விடுமுறை விடப்பட்டிருந்தது. அரண்மனை திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் பலரும்
ஏமாற்றமடைந்தனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தாததை கண்டித்து அரண்மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் எதிரொலியாக ஓணம் பண்டிகை முடிந்த பிறகும் பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று (செப் 1) முதல் மூன்று நாட்களுக்கு ஓணம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதலே அரண்மனை திறக்கப்பட்டு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
மேலும், அங்கு ஊஞ்சல் கட்டி ஓணம் விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை ஆர்வத்துடன் பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.










