LOADING

Type to search

இந்திய அரசியல்

சந்திரபாபு நாயுடு கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

Share

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறாக, அவரை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல. எவர் ஒருவரையும் யாரும் பழிவாங்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.

மாநிலம் தழுவிய பந்த்: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் தழுவிய பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இன்று (செப் 11)நடந்த இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்தது. பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள் மூடியிருந்தன .பேரு ந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ஆந்திரப் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆந்திரப் பிரதேச அரசின் பல்வேறு தோல்விகளை சந்திரபாபு நாயுடு அம்பலப்படுத்தி வருவதால் அவரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பழிவாங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கைதி எண் 7691

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் 7691 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டு உணவு, மாத்திரை, மருந்துகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் கூடிய அறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருக்கு ஜாமீன் கோரி அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.