மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடை நீக்கம்.. நீதிமன்றம் உத்தரவு
Share
நடிகர் விஷால் தன்னுடைய ‘விஷால் பிலிம் பேக்டரி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் கடனை பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டதுடன் கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு 15 கோடியை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லைகா நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை எப்படி செலுத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவுபடி 15 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் படங்கள் வெளியிட தடை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இறுதியாக விஷால் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த 13-ஆம் தேதி வரை அவரது நான்கு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது சொத்துகள் குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பிற்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.













