LOADING

Type to search

இந்திய அரசியல்

இலங்கைக்கு வரும் மற்றொரு சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Share

இலங்கைக்கு வரும் மற்றொரு சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும், அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உளவு பார்ப்பது தான் என்பதால், இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீன உளவுக் கப்பல் ஷி யான் இரு நாட்களுக்கு முன் மலேஷியாவை அடுத்த மலாக்கா நீரிணைக்கு வந்து விட்டதாவும், அங்கிருந்து அக்டோபர் மாத இறுதியில் இலங்கையில் கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 24 அல்லது 25ம் நாள் அக்கப்பல் இலங்கைக்கு வந்து சேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு துறைமுகங்களிலும் மொத்தம் 17 நாட்கள் சீனக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்; அப்போது பல ஆராய்ச்சிகள் செய்யப்படும் என தெரியவந்திருக்கிறது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்குள் நுழைய சீன உளவுக்கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் அது தொடர்பான கோரிக்கை இலங்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தான் சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது.

ஆனால், கடைசி நேரத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்க இலங்கை அரசு மறுத்தால் அந்நாட்டுக்கு மிகக் கடுமையான பாடத்தை மத்திய அரசு புகட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.