கொடைக்கானலில் கடைகளை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம்: வனத்துறை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன
Share
தமிழ்நாட்டின் கோடை வாழ் தலமான கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. வனததில் யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால், வனத்துறைக்கு உட்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.













